கருணாநிதி புகைப்படத்துடன் பேரணி சென்ற மருத்துவர்கள் கைது!
Doctors Protest in Chennai March with Karunanidhi pic
தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான ₹3,000 ஊக்கத்தொகை, முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 354-ஐ மறுஆய்வு செய்தல் மற்றும் பணிச்சுமைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து மருத்துவர்கள் ஒரு பிரம்மாண்ட பேரணியைத் தொடங்கினர். தங்கள் கோரிக்கைகளுக்குப் பிள்ளையார் சுழி போட்ட மறைந்த முதல்வர் கருணாநிதியின் புகைப் படத்தை ஏந்தியபடி, அமைதியான முறையில் அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச்சிலை நோக்கி அவர்கள் முன்னேறினர். எனினும், அந்தப் பகுதியை அவர்கள் அடைந்தபோது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றித் தற்காப்புக் கைது செய்தனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "அரசுடனான பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் காகித அளவிலேயே உள்ளன. எங்களை உருவாக்கிய தலைவரின் சிலை அருகேயே எங்களைக் கைது செய்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது," எனத் தெரிவித்தனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்தப் போராட்டம் ஓயாது என்றும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இந்தத் திடீர் கைதால் சென்னை அண்ணா சாலையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
Doctors Protest in Chennai March with Karunanidhi pic