மீண்டும் வேலையைக் காட்டிய திமுக!ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அனுமதி – கொந்தளித்த சீமான்! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) அனுமதி வழங்கியுள்ளது. இது தமிழக மக்களின் எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எச்சரிக்கைகளையும் புறக்கணிக்கும் செயல் எனக் கூறி, இந்த அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ராமநாதபுரம் மாவட்டத்தின் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேலங்குப்பம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காக, ஒன்றிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் முன்மொழிந்திருந்தது. அதற்கு SEIAA தற்போது சூழலியல் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் பொருளாதாரத்தை உடைய பகுதி. அங்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்தல் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,"இந்தியாவில் ஒரே கடல்சார் உயிர்கோளக் காப்பகமாக விளங்கும் மன்னார் வளைகுடா, அரிய உயிரினங்கள், பவளப் பாறைகள், மீன்கள், கடல் மிருகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடல் உயிரினங்களுக்கு வாழிடமாக உள்ளது. கிணறு தோண்டும் திட்டப்பகுதி இதற்கு அருகிலேயே உள்ளது. அதனால், இந்தச் செயல்பாடுகள் கடல் சுற்றுச்சூழலைக் குலைத்து, உயிரினங்களின் வாழ்வையும், கடற்கரை சூழலையும் ஆபத்துக்குள்ளாக்கும். கூடுதலாக, கிணறு, குழாய்கள், செயலாக்க ஆலைகள் ஆகியவற்றுக்குப் பெரும் நிலப்பரப்பு தேவைப்படும். இதனால் உள்ளூர் மக்கள் வாழ்விடங்களும், நில வளங்களும் பாதிக்கப்படும்," என்று எச்சரித்துள்ளார்.

அதோடு, அரசியல் நோக்கிலும் கடும் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.
"2019-ஆம் ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக, சட்டசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது. 2023-ஆம் ஆண்டில் ஆளும் கட்சியாக இருந்தபோது இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம் என்றும் உறுதியளித்தது. ஆனால் இன்று அதே திமுக அரசின் ஆட்சியில் SEIAA அனுமதி வழங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்க முரண்பாடு. மேலும், இந்த ஆணையத்தின் உறுப்பினர்களை மாநில அரசே தேர்ந்தெடுக்கிறது. எனவே முழுப் பொறுப்பும் தமிழக அரசின் மேல் தான் உள்ளது," என சீமான் வலியுறுத்தினார்.

அவர் மேலும்,"சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2006-ஐ உருவாக்கியபோது, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தவர் திமுகவின் ஆ.ராசா என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது அதையே புறக்கணித்து அனுமதி வழங்கப்படுகிறது. இனியும் மக்களை வெற்றுச் சொற்களால் ஏமாற்றாமல், திமுக அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மாநில அரசு உடனடியாக இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய பாஜக அரசும் இந்த திட்ட முன்மொழிவை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் நாம் தமிழர் கட்சி மக்கள் போராட்டங்களை பெரிதும் முன்னெடுக்கும்," என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK shows its work again Hydrocarbon well approval in Ramanathapuram Seeman is furious


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->