ரத்ததானம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்!
District Collector and Superintendent of Police donate blood
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ரத்தம் வழங்கி ரத்ததான முகாமை துவக்கி வைத்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கானாவிளக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இங்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்து சித்ரா தலைமையில் மருத்துவ மாணவர்கள் இணைந்து தேனி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு தேவைப்படும் ரத்தத்தை சேகரிப்பதற்காக ரத்ததான முகாமை மருத்துவக் கல்லூரி விளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்தனர்.
இந்த ரத்ததான முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்சிங் மற்றும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் ஆகியோர் முகாமை துவங்கி வைத்ததோடு, தாங்களே இரத்ததானமும் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வு, ரத்ததான விழிப்புணர்வை மாணவர்களுக்கும், பார்வையாளருக்கும் ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இந்த ரத்ததான முகாமில் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் அளித்தனர்.
ரத்ததானம் அளித்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் இரத்தஅழுத்தம் ,ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. முகாமில் துணை முதல்வர் தேன்மொழி, கண்காணிப்பாளர் மருத்துவர் விஜய் ஆனந்த், நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமார், துணை நிலைய மருத்துவ அலுவலர்கள் மணிமொழி, ஈஸ்வரன், ரத்த வங்கி மருத்துவர்கள் கண்ணன், அனுமந்தன், அனுஷா, பிரியா, லிவின்குமார் உள்பட மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
District Collector and Superintendent of Police donate blood