'இயக்குநர் பார்த்தீபன் ஆளுநரை புகழ்ந்தது தமிழ் நாட்டுக்கு செய்யும் துரோகம்'; வன்னி அரசு பதில்..!
Director Parthiban praise of the Governor is a betrayal of Tamil Nadu Vanniyaarsu
உலக காச நோய் தின விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. குறித்த நிகழ்வுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். குறித்த விழாவில் பேசிய இயக்குநர் பார்த்திபன் பேசியதாவது; "இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
அத்துடன், ''நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா..? என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார். அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.'' என்றும் பேசினார்.
மேலும், ''ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது" என்று இயக்குநர் பார்த்தீபன் தெரிவித்தார்.
-97aft.jpg)
இந்நிலையில், ஆளுநரை புகழ்ந்த பார்த்திபனுக்கு வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; "பெருமதிப்புக்குரிய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் பார்த்திபன் அவர்களுக்கு வணக்கம். திரைத்துறையில் தங்களுக்கென புதிய_பாதை அமைத்து வெற்றி பெற்றவர். வசனங்களிலும் உரையாடலிலும் சமூக அக்கறையோடும் தமிழ் பண்பாட்டை காக்கும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டவர்.
அந்த ஒத்தசெருப்பு ஒன்றே போதும் தங்களுடையை தனித்துவத்துக்கும் பண்பாட்டுக்கும் சான்று. மிகுந்த நம்பிக்கையொளியோடு தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தவர். ஆனால், நேற்றைய ஆளுனர் மாளிகை விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை அந்த நம்பிக்கையை நொறுக்கி விட்டது.
ஆளுனர் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறாரா? அல்லது இழிவு படுத்துகிறாரா? இதே ஆளுனர் மாளிகையில் பல நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை. அதை திட்டமிட்டே அவமானப்படுத்துகிறார். கடந்த சட்டப்பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போதே அவமதித்து வெளியேறியவர் திரு.ரவி அவர்கள்.
இது தான் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் அழகா? அதே போல,"குழந்தை திருமணம் நல்லது. நானும் கூட குழந்தை திருமணம் செய்தவன் தான்" என கடந்த கடந்த மார்ச் 12,2023 அன்று பெருமையோடு பிதற்றினார். இது தமிழ் பண்பாடா?
அதே போல, கடந்த அக்டோபர் 4,2023 அன்று சிதம்பரத்தில் தலித்துகளுக்கு பூணூல் போடும் விழாவை நடத்தினார். சனாதனத்துக்கு எதிராக புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் செயல்படுவோரை நயவஞ்சகமாக அதிகாரத்தின் மூலமாக ஏமாற்றி பூணூல் அணிவிப்பது தமிழ் பண்பாடா?
-dgq5l.jpg)
தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றி அறிவித்தாரே இது தமிழ்நாட்டு பண்பாடா? இப்படி ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கையும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கையும் ஆதாரங்களுடன் அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ஆளுனர் ரவி போன்றோரை புகழ்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு.
ஆனால்,தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் ஆளுனருக்கு தங்களைப்போன்ற புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமில்லையா?" என்று வன்னியரசு பதிவிட்டுள்ளார்.
English Summary
Director Parthiban praise of the Governor is a betrayal of Tamil Nadu Vanniyaarsu