டிஜிட்டல் அரெஸ்ட் ..ரூ.50 லட்சம் பணம் மோசடி- 3 பேர் கைது!
Digital arrest 50 lakh rupees money fraud 3 arrested
தூத்துக்குடி மாவட்டத்தில் ‘டிஜிட்டல் அரஸ்ட்’ என்ற பெயரில் நடந்த ரூ.50 லட்சம் பண மோசடி வழக்கில், ஆந்திராவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு மர்ம நபர்கள் வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொண்டு தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி உங்களது ஒரு வங்கி கணக்கு மும்பையில் உள்ளதாகவும் அதில் மனிதகடத்தல் வழக்கில் ரூபாய் 2 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் மூதாட்டியை கைது செய்யாமல் இருக்க 50 லட்சம் பணம் தருமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இதனால் பயந்து போன மூதாட்டி ரூ.50 லட்சம் பணத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்துள்ளார்.பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த அந்த மூதாட்டி இதுகுறித்து NCRP-ல் புகார் பதிவு செய்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை வங்கி கணக்கு மற்றும் வங்கி கணக்குடன் தொடர்புடைய பணப் பரிமாற்றங்களை ஆராய்ந்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஆந்திரபிரதேசம், விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பள்ளிபரமேஸ்வரராவ், ஆந்திரபிரதேசம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர்களான சுகந்திபதிசந்திரசேகர்மற்றும் ஆடும்சுமில்லி சிவராம்பிரசாத்ஆகியோர் மூதாட்டியிடம் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகளான 3 பேரையும் கைது செய்து நேற்று முன்தினம் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மேலும் மேற்சொன்ன மோசடியில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து மொத்தம் 6 செல்போன்கள், ஏடிஎம் கார்டுகள், வங்கி கணக்கு அட்டைகள் போன்றவற்றை பறிமுதல் செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Digital arrest 50 lakh rupees money fraud 3 arrested