200-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
Devotees sacrifice more than 200 goats and chickens to offer prayers to Goddess Durga
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோயில் தேர் திருவிழாவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் அருகே கெலமங்கலத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோயில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் கெலமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர்.
கெலமங்கலத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும், அந்த வகையில் இந்த ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மனுக்கு தீபாராதனைகள் மற்றும் மலர் அலங்காரங்கள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அதனைத்தொடர்ந்து இன்று பட்டாளம்மன் கோயிலில் மடித்தேர் விழா நடைபெற்றது. கோயில் முன்பு அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த திருத்தேரில் ஸ்ரீ பட்டாளம்மனை அமர வைத்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது தேர் மீது உப்பு, மிளகு மற்றும் வாழை பழங்களை பக்தர்கள் வீசினர். தேரானது தேர் வீதிகளில் சுற்றி வந்து தேன்கனிக்கோட்டை சாலையில் நிறுத்தப்பட்டது. இந்த திருவிழாவில் கெலமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பட்டாளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி சென்றனர்.
இந்த தேர்த்திருவிழாவில் ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், தளி தொகுதி எம்எல்ஏ டி. இராமச்சந்திரன் மற்றும் கோயில் கமிட்டி உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகளை பக்தர்கள் பலியிட்டனர்.
English Summary
Devotees sacrifice more than 200 goats and chickens to offer prayers to Goddess Durga