மகாளய அமாவாசை 2025: ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படவேண்டும் என கோரிக்கை..!
Demand for a special train to Rameswaram on the occasion of Mahalaya Amavasya 2025
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை என்றும், அதற்கு முன்பு வரும் 15 நாட்களை மகாளய பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் முன்னோர்களை வழிபட்டு, 15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும், தான தர்மங்கள் செய்வதும் மிகவும் சிறப்பானது என நம்பப்படுகிறது.
இந்த மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டுமென்று பயணிகள் சங்க நிர்வாகிகள், பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் சென்று வருகின்றனர். குறிப்பாக, மகாளய. அமாவாசையன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்க இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இதையொட்டி தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ராமேஸ்வரம் வரும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி மதுரை, திருச்சி, சேலம், சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு ரயில் பயணம் வசதியாக இருக்கும் என்பதால் மகாளய அமாவாசையன்று சிறப்பு ரயில் இயக்கவேண்டும் என்று பயணிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகி கெங்காதரன் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி மகாளய அமாவாசைக்காக மதுரை, விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அத்துடன், இம்முறை மதுரையில் இருந்து அதிகாலை 02 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 05 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் வகையிலும், ராமேஸ்வரத்தில் இருந்து காலை 09 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு மதுரை செல்லும் வகையிலும் சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஏற்கனவே விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் அதே நேரத்தில் மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சேலம், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து விழுப்புரம் வரும் பயணிகள், அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் ராமேஸ்வரத்திற்கு எளிதில் சென்று வர முடியும் என்றும்,இதுகுறித்து மதுரை, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
Demand for a special train to Rameswaram on the occasion of Mahalaya Amavasya 2025