போதிய நீர் இல்லை; ஜூன் 12-இல் திறக்கப்படாத மேட்டூர் அணை: டெல்டா விவசாயிகள் கவலை..!
Delta farmers are concerned as the Mettur Dam did not open on June 12
போதிய நீர் இல்லாத காரணத்தால் 62-வது முறையாக இந்த ஆண்டு குறித்த தேதியில் டெல்டா பாசனத்துக்காக வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, திறக்கப்படவில்லை. அணை திறப்பு தாமதமாவது குறித்தோ, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் குறித்தோ அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வராததால் டெல்டா விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம்.
அதே நேரம், அணையில் நீர் இருப்பைப் பொறுத்து ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்பாகவோ அல்லது காலதாமதமாக அணையில் இருந்து நீர் திறந்து விடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அணையில் குறைந்தபட்சம் 90 அடி நீர் இருந்தால் மட்டுமே டெல்டா சாகுபடிக்கு முழுமையாக திறக்க முடியும். ஆனால், நடப்பு பாசன ஆண்டுக்கு இன்று (ஜூன் 12) நீர் திறக்கப்பட வேண்டிய நிலையில் அணையின் நீர்மட்டம் 79.62 அடியாக உள்ளது. எனவே, இன்று நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அணையின் 93 ஆண்டு கால வரலாற்றில் உரிய காலத்தில்(ஜூன் 12) டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படாமல்போவது இது 62-வது முறையாகும். அத்துடன், உரிய நாளான ஜூன் 12-ஆம் தேதி 20 முறையும், நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்பு 11 முறையும் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தாண்டு குறிப்பிட்ட நாளில் அணை திறக்காததால், டெல்டா மாவட்டங்களில் சுமார் 06 லட்சம் ஏக்கரில் செய்ய வேண்டிய குறுவை சாகுபடியின் பரப்பளவு 50 சதவீதம் குறைந்துள்ளது.
இதனால், பம்புசெட்பாசன வசதி கொண்ட விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, டெல்டா மாவட்டங்களில் தற்போது சுமார் 03 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1.75 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, நெற்பயிர்கள் காய்ந்து வருகிறது. இதனால், ஆங்காங்கே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குவதுடன், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி விவசாயிகள்:
இதுகுறித்து காவிரி உரிமை செயற்பாட்டாளர் வெ.ஜீவக்குமார் கூறியதாவது;
மேட்டூர் அணையின் நீர் இருப்பு என்பது இந்தாண்டு தொடக்கத்திலிருந்தே குறைவாகத் தான் உள்ளது என்றும், ஆனால், நமக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து பெற தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறந்தாலும் அல்லது காலதாமதம் ஆனாலும், வேளாண் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்ப, குறுவை சாகுபடிக்கு எந்தெந்த ரக விதைகளை தேர்வு செய்து பயிரிட வேண்டும் என ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த ஆண்டு குறுவை சாகுபடி தொடர்பாக வேளாண் துறை எந்த அறிவுரையும் வழங்கவில்லை என்றும், அரசின் இந்த மௌனம் என்பது டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், இதுபோன்ற தருணங்களில் தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கும். ஆனால், இதுவரை அதற்கான எந்த முயற்சியும் அரசு எடுக்காதது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்தால் தான் அணைக்கு நீர் வரும் என்றும், தற்போது நீர் வரத்து 1,000 கன அடிக்கு குறைவாக உள்ளதால், இதே நிலை நீடித்தால் ஆகஸ்ட் மாதத்தில் தான் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Delta farmers are concerned as the Mettur Dam did not open on June 12