'ஸ்ரீவைகுண்டத்தில் விஜய் ரசிகைக்கு நடந்ததது அநீதி; தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை அதிர்ச்சியளிக்கிறது'; உதயநிதி, எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..!
Udhayanidhi and Edappadi Palaniswami strongly condemn the injustice faced by a female Vijay fan in Srivaikuntam
''ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜய்யின் ரசிகைக்கு தவெக நிர்வாகிகளால் நடந்துள்ள அநீதி, தமிழ்நாட்டுப் பெண்களை கொதிப்படைய வைத்துள்ளது' என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும், 'உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா? ' என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் முதல்வர் விஜய்க்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது;
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர். 'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார் ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேப்போன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தவெக MLA சரவணன் ஆதரவில் ,இந்த கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும், இதனை மறைக்க, தவெக MLA சரவணனே அந்த பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகிறது.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? அதுவும், ஒரு ஆளுங்கட்சி MLA இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்கு சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?
உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்த கொடுமைக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகிறது என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் Powercenter-ஆ?
சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் Single Take-ல் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் முதல்வர் விஜய் அவர்களே..!
பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூருக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த MLA-வாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.'' என கடுமையா விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
English Summary
Udhayanidhi and Edappadi Palaniswami strongly condemn the injustice faced by a female Vijay fan in Srivaikuntam