சென்னை மணலியில் அபாயகரமான ஓசோன் காற்று மாசு: தேசிய அளவை விட 5 மடங்கு அதிகம்; அதிர்ச்சித் தகவல்!
Dangerous Ground Level Ozone Pollution in Chennai Manali 5 Times Higher Than National Standards
பூமியின் வளிமண்டல அடுக்கில் 15 முதல் 30 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இயற்கை ஓசோன் படலம், சூரியனிடமிருந்து வரும் 97 முதல் 99 சதவீதம் வரையிலான ஆபத்தான புற ஊதா கதிர்களை உறிஞ்சி பூமியைக் காக்கும் கவசமாகச் செயல்படுகிறது. 1913-ஆம் ஆண்டு பிரஞ்சு இயற்பியல் வல்லுநர்களான சார்லசு பாப்ரி மற்றும் ஹென்றி புய்சன் ஆகியோரால் கண்டறியப்பட்ட இந்த அடுக்கு மனிதர்களின் செயல்பாடுகளால் மெலிதாகி வருகிறது. அதே நேரத்தில், வாகனப் புகை, தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவை சூரிய ஒளியுடன் வேதிவினை புரியும்போது தரைப் பரப்புக்கு அருகில் உருவாகும் ஓசோன் மூலக்கூறுகள், கடுமையான காற்று மாசுபாடாக மாறி மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் தீங்கு விளைவிக்கின்றன.
மணலி: நாட்டின் மிக மோசமான ஓசோன் மாசு மையம்
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தரவுகளின்படி, வடசென்னையில் உள்ள மணலி தொழிற்பேட்டை பகுதி நாட்டின் மிக மோசமான ஓசோன் மாசுபாடு மையங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
மே 19 உச்சக்கட்டப் பதிவு: மணலி பகுதியில் ஒரு கன மீட்டர் காற்றில் 500 மைக்ரோகிராம் என்ற அளவில் ஓசோன் மூலக்கூறுகள் பதிவாகியுள்ளது. இதுவே 2026-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே பதிவான மிக உயர்ந்த காற்றுமாசு அளவாகும்.
மே 3 பதிவு: இப்பகுதியின் மற்றொரு காற்றுத் தர கண்காணிப்பு நிலையத்தில் 361 மைக்ரோகிராம் அளவில் ஓசோன் பதிவாகியுள்ளது.
இங்கு செயல்பட்டு வரும் பெட்ரோலிய ரசாயன தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், உரத் தொழிற்சாலைகள் மற்றும் அனல்மின் நிலையங்கள் இந்த நச்சுப் புகை அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.
தேசிய தர நிர்ணய விதிமீறல்கள்
எரிசக்தி மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) அறிக்கை: தேசிய காற்றுத் தர அளவுகோலின்படி, 8 மணி நேர சராசரி அடிப்படையில் ஓசோன் அளவு ஒரு கன மீட்டருக்கு 100 மைக்ரோகிராம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 24 நாட்கள் மணலியில் இந்த ஓசோன் அளவு தேசிய தரநிலையைத் தாண்டிப் பதிவாகியுள்ளது என்று அதன் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விளக்கமும் முன்னேற்றமும்
இந்தத் தீவிர மாசுபாட்டிற்குத் தொழிற்சாலைகள் மட்டுமின்றி, அதீத வாகன போக்குவரத்து மற்றும் ஆவியாகும் கரிமச் சேர்மங்களும் முக்கியக் பங்கு வகிப்பதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பல்வேறு நவீன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மணலியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 2018-ல் 118 ஆக இருந்த நிலை மாறி, தற்பொழுது 2026-ஆம் ஆண்டில் 64 ஆகக் குறைந்து கணிசமான முன்னேற்றமடைந்துள்ளது. மேலும், அங்கு அதிக மாசு ஏற்படுத்திய 17 முக்கியத் தொழிற்சாலைகளில், 15 தொழிற்சாலைகள் தற்பொழுது கச்சா எரிபொருள் எண்ணெய்க்குப் பதிலாக சி.என்.ஜி (CNG), எல்.பி.ஜி (LPG) மற்றும் நாப்தா போன்ற தூய்மையான பசுமை எரிபொருட்களுக்கு வெற்றிகரமாக மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Dangerous Ground Level Ozone Pollution in Chennai Manali 5 Times Higher Than National Standards