கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாடு மீனவர் பலிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. - Seithipunal
Seithipunal


கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாடு மீனவர் பலிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம், கொளத்தூர் தாலுகா, மேட்டூர், கோவிந்தபட்டியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட 7 பேர் கடந்த 14ந் தேதியன்று காவிரி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற போது, கர்நாடக மாநில வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டைச் சார்ந்த  ராஜா என்ற காரவடையான் பலியாகியுள்ளார். கர்நாடக வனத்துறையினரின் இந்த ஜனநாயக விரோத, சட்டவிரோத படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் காவிரியுடன் இணையும் பாலாறு வனப்பகுதி உள்ளது. மலையோர தமிழக கிராமங்களிலிருந்து செல்லும் மீனவர்கள் பாலாற்றை கடந்து சென்று இப்பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம். 

அந்த வகையில் சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தபாடி, தருமபுரி மாவட்டம் ஏமனூரைச் சேர்ந்தவர்கள் இரண்டு பரிசல்களில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். 

உயிருக்கு பயந்து அனைவரும் தப்பியோடிய நிலையில் ராஜா என்ற காரவடையான் என்பவர் மீது குண்டு பாய்ந்து ஆற்று நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். இதேபோன்று, 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களை கார்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியில் பழனி என்பவர் பலியாகியுள்ளார். கர்நாடக வனத்துறையினர் படுகொலைகள் தொடர்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

எனவே, துப்பாக்கிச் சூடு நடத்திய கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டுமெனவும், அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலைகள் புரியும் கர்நாடக வனத்துறையினரின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திடவும், உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கிடுவதற்கும் கர்நாடக அரசை தமிழ்நாடு அரசு உரிய முறையில் நிர்ப்பந்திக்க வேண்டுமென சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும், உயிரிழந்த குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலியான ராஜாவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இது ஆறுதல் அளிப்பதாக இருப்பினும், கூடுதலாக இழப்பீடும், அவரது குடும்பத்திற்கு அரசு வேலையும் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்வர வேண்டும்" என்று கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPIM Condemn To Karnataka Forest Police


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->