குழந்தை பாலினம் வெளியிட்ட சர்ச்சை! யூடியூபர் இர்பானுக்கு மீண்டும் சம்மன்?யூடியூபர் இர்ஃபான் பைலை மீண்டும் தூசி தட்டும் அதிகாரிகள்!
Controversy over revealing the baby gender Another summons for YouTuber Irfan Officials dust off YouTuber Irfan file once again
கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை பிறப்பதற்கு முன்பே வெளிப்படுத்தியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக, பிரபல யூடியூபர் இர்பானுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி நேரில் விசாரணை நடத்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பிறப்பதற்கு முன்பே கண்டறிவதும், அதை வெளியிடுவதும் கருவுறுதல் முன் மற்றும் கருவுறுதலுக்கு முந்தைய நோயறிதல் தொழில்நுட்பங்கள் (PCPNDT) சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பெண் சிசுக் கொலை போன்ற குற்றங்களைத் தடுக்க இந்தச் சட்டம் அமலில் உள்ளது.
இந்த நிலையில், யூடியூபர் இர்பான் தனது கர்ப்பிணி மனைவியுடன் 2024-ஆம் ஆண்டு துபாய்க்குச் சென்று, பிறக்கவிருந்த குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் 2024 ஜூலை மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு அவர் அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்ததுடன், மன்னிப்பு கடிதமும் வழங்கியதாக கூறப்பட்டது. பின்னர் அந்த வீடியோ நீக்கப்பட்டதையடுத்து, அப்போதைய விசாரணை முடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கறிஞர் ஜெகந்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மன்னிப்பு பெற்றதன் அடிப்படையில் மட்டும் வழக்கை முடிப்பது சட்டப்படி ஏற்க முடியாது என்றும், இர்பானை மீண்டும் நேரில் அழைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எட்டு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, யூடியூபர் இர்பானுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி நேரில் விசாரணை நடத்துவது குறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் மருத்துவத் துறை எடுக்கவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
English Summary
Controversy over revealing the baby gender Another summons for YouTuber Irfan Officials dust off YouTuber Irfan file once again