மதுரையில் தொடர் பரபரப்பு! சாலையில் சரக்கு வாகனத்தில் தீ! பஜாரில் கடைகளில் தீ!
Continued excitement Madurai Fire cargo vehicle road Fire shops bazaar
மதுரை மாநகரில் நேற்று 2 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின.
முதல் சம்பவம் :
மாட்டுத்தாவணி அருகே மேலூர் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் திடீரென தீப்பிடித்தது. அட்டைப் பெட்டிகளில் அடுக்கி எடுத்து செல்லப்பட்ட பொருட்கள் சில நொடிகளில் எரிந்துவிட்டன.அங்கு சில பொருட்கள் வெடிக்க தொடங்கியதால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பரபரப்புடன் அச்சத்தால் ஓடினர். உடனடியாக தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தால் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இரண்டாம் சம்பவம் :
ஆயுத பூஜை கொண்டாட்டம் முடிந்த சில மணி நேரத்திலேயே மீனாட்சி பஜாரில் பரபரப்பு! அங்கிருந்த 184-வது எண் செல்போன் விற்பனை கடையில் பூஜைக்குப் பிறகு விளக்கை அணைக்காமல் விட்டதால் திடீரென தீப்பிடித்தது.மேலும்,மின்னல் வேகத்தில் பரவிய தீ, செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் வெடிப்பை ஏற்படுத்தி, அருகிலிருந்த 3 கடைகளுக்கும் பரவியது. இதனை கண்ட பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் தீயை அணைக்க போராடினாலும் வெற்றியளிக்கவில்லை.இந்த தகவல் கிடைத்ததும், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் தல்லாகுளம் நிலையத்திலிருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர்.இந்த சம்பவத்தில் 4 கடைகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் சாம்பலானது.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பாக, மாட்டுத்தாவணி மற்றும் திடீர்நகர் காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Continued excitement Madurai Fire cargo vehicle road Fire shops bazaar