நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்...! காதலனுக்காக கொடுத்த 10 பவுன் நகையை கேட்டதால் தாயை கொல்ல முயன்ற கல்லூரி மாணவி...!
College Student Attempts Kill Mother After She Demands Return10 Sovereigns jewelry Given Her Boyfriend
நாகர்கோவில் பிள்ளையார்புரம் அன்னம் வலை கம்பெனி தெரு பகுதியில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ். அவரது மனைவி கலாவதி. இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகள் சுருதி (19) நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

அதே கல்லூரியில் படித்து வந்த திங்கள்சந்தை அருகே மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த அபிலாஷ் (19) என்ற மாணவருடன் சுருதிக்கு காதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கலாவதி வைத்திருந்த பத்து பவுன் நகைகள் திடீரென மாயமானது குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மகளிடம் கேட்டபோது, அவசர தேவைக்காக பணம் தேவைப்பட்டதால் காதலன் அபிலாஷுக்கு அந்த நகைகளை கொடுத்ததாக சுருதி தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த கலாவதி, நகைகளை உடனே திருப்பி வாங்கித் தருமாறு மகளிடம் வலியுறுத்தினார். ஆனால் நகைகள் திரும்ப கிடைக்காததால் தாய்-மகளுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் நேற்று அபிலாஷ் சுருதியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது கலாவதி நேரடியாக நகைகள் குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அபிலாஷ், அருகில் இருந்த உருட்டுக் கட்டையால் கலாவதியின் தலையின் பின்பகுதியில் தாக்கினார். திடீர் தாக்குதலில் அவர் மயங்கி கீழே சரிந்தார்.
அதனைத் தொடர்ந்து அபிலாஷும் சுருதியும் சேர்ந்து சுடிதார் துப்பட்டாவால் கலாவதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அச்சமயம் கலாவதி எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த அதிர்ச்சி காட்சியை கண்டு பதறினர்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த கலாவதியை உடனடியாக மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் காவலில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவலர்கள் அபிலாஷ் மற்றும் சுருதி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் சுருதி தக்கலை கிளை சிறையிலும், அபிலாஷ் நாகர்கோவில் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
English Summary
College Student Attempts Kill Mother After She Demands Return10 Sovereigns jewelry Given Her Boyfriend