அனைத்து போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட் - "சென்னை ஒன்று" செயலியை அறிமுகப்படுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.!!
chief minister mk stalin intro chennai one app
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2-வது ஆணையக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சென்னை பெருநகரப் பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த ‘கியூ.ஆர்.’ பயணச்சீட்டு மற்றும் பயணத்திட்டமிடல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
நாட்டிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய ‘சென்னை ஒன்று' செல்போன் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த செயலி பேருந்து, மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் டாக்சி, ஆட்டோக்களை ஒரே ‘கியூ.ஆர்.’ பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் பேருந்துகள், மெட்ரோ மற்றும் மின்சார ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், யு.பி.ஐ. அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.
இந்தச் செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘சென்னை ஒன்று' செயலி பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இதனால், பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
chief minister mk stalin intro chennai one app