சென்னை மக்களே உஷார்.! சென்னை காவல்துறை போட்ட அதிரடி திட்டம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நேற்று ரோந்து வாகனத்தில் புகார் அளிக்கும் திட்டத்தைச் சென்னை காவல் ஆணையர் இன்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து சென்னை காவல்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருபதாவது, 

“சென்னைப் பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், சென்னைப் பெருநகரப் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கிடவும், குற்றங்களைத் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சென்னைப் பெருநகரில் செயல்பட்டு வரும் 136 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், சென்னைப் பெருநகரில் பிரதான சுற்றுக் காவல் வாகனம் (Main Patrol Vehicle), கூடுதல் சுற்றுக் காவல் வாகனம் (Additional Patrol vehicle), ஜிப்சி ரோந்து வாகனம் (Gypsy Patrol), சிறப்புச் சுற்றுக் காவல் வாகனம் (Special Patrol), பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் ஆகியோரின் உதவிக்காக அம்மா ரோந்து வாகனம் எனச் சென்னைப் பெருநகரில் 355 சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்பட்டு, பொதுமக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் சம்பவ இடம் சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

GPS, MDT கருவிகள் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டு, வாகனங்கள் நிலை கொண்டுள்ள இடம் கண்டறியப்பட்டும், முக்கியப் பகுதிகளில் செயல்படும் 10 ரோந்து வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும், காவல் ஆணையரகத்தில் உள்ள 7 ஆவது தளத்தில் இயங்கி வரும் நவீனக் கட்டுப்பாட்டறை மூலம் கேமரா பதிவுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களின் சேவைகளை மக்கள் பயன்படுத்தவும், புகார் கொடுக்க காவல் நிலையம் செல்ல முடியாத பொதுமக்களுக்குப் புகாரைப் பெற்று உதவிடவும், சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், காவல் ரோந்து வாகனத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கும் திட்டத்தை நேற்று (04.11.2020) மாலை, சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

அதன்பேரில், சென்னைப் பெருநகரிலுள்ள 124 காவல் நிலையச் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் தினசரி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அந்தந்தக் காவல் நிலையச் சரகத்தில் அறிவிக்கப்பட்ட இடங்களில் உரிய நேரப்படி நிறுத்தப்படும்.

காவல் நிலையம் வர இயலாத மனு செய்யும் புகார்தாரர்கள் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களில் புகார்களைக் கொடுத்து, புகார் மனு ஏற்புச் சான்று (CSR) பெற்றுக் கொள்ளலாம். அந்தப் புகார்கள் காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரியிடம் சேர்க்கப்பட்டு, மனுதாரருடைய கைப்பேசி எண்ணுக்கு மனு ரசீது எண் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டு உரிய அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தப் புதிய திட்டத்திற்காக அனைத்து ரோந்து வாகனங்களுக்கும் ரோந்துக் காவல் ஆளிநர்களிடம் மனு ஏற்பு ரசீது புத்தகம் வழங்கும் முறையைச் சென்னைப் பெருநகரக் காவல் ஆணையர் நேற்று  தொடங்கி வைத்தார். 

சென்னைப் பெருநகரக் காவல் கட்டுப்பாட்டறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசர உதவி எண் 100, பெண்கள் உதவி எண்கள் 1091, 044-23452365, முதியோர் உதவி எண்கள் 1253 மற்றும் 044-23452367 ஆகியவற்றைத் தொடர்புகொண்டு உதவி பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்”. என்று சென்னை காவல்துறை அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai police announcement


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->