சென்னையின் ‘பறவை மனிதர்’ ஜோசஃப் சேகர் காலமானார்: கிளிகள் இழந்த அன்பு நண்பன்!
chennai paravai manithan sekar death
சென்னை ராயப்பேட்டையில் தினமும் பல்லாயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து, உலக அளவில் கவனத்தை ஈர்த்த ‘பறவை மனிதர்’ (Bird Man) ஜோசஃப் சேகர், நேற்று (டிசம்பர் 11) இரவு காலமானார்.
கேமரா மெக்கானிக்காக வாழ்க்கையைத் தொடங்கிய சேகர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் மொட்டை மாடியில் சில கிளிகளுக்கு அரிசி வைக்கத் தொடங்கினார். நாளடைவில் அது ஆயிரக்கணக்கான கிளிகள் கூடும் ஒரு சரணாலயமாகவே மாறியது. இவரது இந்தச் சேவையை சர்வதேச ஊடகங்களும், இயற்கை ஆர்வலர்களும் வியந்து பாராட்டி வந்தனர்.
ஆனால், வாடகை வீட்டில் வசித்து வந்த அவருக்கு வீட்டை காலி செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. கிளிகளைப் பிரிய மனமில்லாமல், தான் பொக்கிஷமாகச் சேகரித்து வைத்திருந்த அரிய வகை கேமராக்களை விற்று அந்த வீட்டை வாங்க அவர் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை காலி செய்த அவர், கிளிகளுக்கு உணவளிக்க முடியாமல் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த சேகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயற்கையின் மீது தீராக்காதல் கொண்ட இந்த எளிய மனிதரின் மறைவு, பறவை ஆர்வலர்கள் மற்றும் சென்னை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
chennai paravai manithan sekar death