சென்னை தூய்மை பணியாளர்களின் 100வது நாள் போராட்டம்... போலீஸ் குவிப்பு!
Chennai Corporation Sanitation workers protest police
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார்மயப்படுத்தும் முடிவை எதிர்த்து, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தூய்மைப் பணியாளர்கள் கடந்த 90 நாட்களுக்கும் மேலாக ரிப்பன் மாளிகை உள்ளிட்ட பல இடங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பல முறை பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த தீர்வும் கிடைக்காததால், பணியாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதே பிரச்சாரத்தின் போது, கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி நள்ளிரவில், நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பல தூய்மைப் பணியாளர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு, விடுதலையடையும் நிலை தொடர்ந்தது.
சமீபத்தில், நவம்பர் 5 அன்று மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் கடலுக்குள் இறங்கி, கையில் பதாகைகள் ஏந்தி தூய்மைப் பணியாளர்கள் ஆபத்தான முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனிடையே, இன்றுடன் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளதால், எந்தவித அவசர சூழலும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரிப்பன் மாளிகை மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Chennai Corporation Sanitation workers protest police