சென்னை: சேப்பாக்கம் நடைபாதையில் வசித்த 66 வீடற்ற நபர்கள் மீட்பு - மாநகராட்சி காப்பகங்களில் தஞ்சம்!
Chennai Corporation Rescues 66 Homeless People Near Chepauk Stadium
சென்னையில் வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானம் மற்றும் பீட்டர்ஸ் சாலை அருகே உள்ள நடைபாதைகளில் பல ஆண்டுகளாக வசித்து வந்த 23 குழந்தைகள் உட்பட 66 வீடற்ற நபர்களைச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கையில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆண்கள், 25 பெண்கள் மற்றும் 23 குழந்தைகள் அடங்குவர். இதில் 2 வாரக் குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரையிலும், 25 வயதுடைய மாற்றுத்திறனாளி ஒருவரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அவர்களின் உடைமைகளுடன் மாநகராட்சியின் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அண்ணா சதுக்கம் அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள 33 அறைகள் கொண்ட நவீனத் தங்குமிடத்தில் 26 அறைகள் இக்குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் விளக்கு, மின்விசிறி, அலமாரி மற்றும் தனிக் கழிவறை, ஆர்.ஓ. குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் மெரினா பகுதியில் வசித்து வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 18 பேரைக் கொண்ட 7 குடும்பங்கள், மாநகராட்சியின் நரிக்குறவர் இரவுத் தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உலக வீடற்றோர் தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், நகரின் வீடற்ற மக்களுக்கான இந்த மறுவாழ்வு திட்டம் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.
English Summary
Chennai Corporation Rescues 66 Homeless People Near Chepauk Stadium