தொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு - மத்திய அரசுக்கு எச்சரிக்கையுடன், கோரிக்கை வைத்த மரு. இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பை அரசு கைவிட வேண்டும் என மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் பொதிகைத் தொலைக்காட்சி உட்பட அனைத்து மாநிலத் தொலைக்காட்சிகளிலும் தினமும் சமஸ்கிருத செய்திகளையும், வாராந்திர செய்தித் தொகுப்பையும் ஒளிபரப்ப வேண்டும் என்று மண்டல தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிலைய அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. மக்களின் விருப்பத்திற்கு மாறாக செய்திகள் மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.

பிரசார்பாரதி நிறுவனத்தின் ஆளுகையின் கீழ் செயல்படும் தூர்தர்ஷன் தலைமை அலுவலகத்திலிருந்து அனைத்து மண்டல தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள கோப்பு எண் 8/38/2020 பி1 என்ற எண் கொண்ட 26.11.2020 தேதியிட்ட சுற்றறிக்கையில் தில்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தினமும் காலை 7.15 மணி முதம் 7.30 மணி வரை 15 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் சமஸ்கிருத செய்திகளை அனைத்து மாநில மொழி செயற்கைக்கோள் ஒளிபரப்பு அலைவரிசைகளும் அதே நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும் அல்லது அடுத்த அரை மணி நேரத்திற்குள் ஒளிபரப்ப வேண்டும் என்று ஆணையிடப் பட்டுள்ளது. அதேபோல், சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு தில்லி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் வாரந்திர செய்தித் தொகுப்பை அதே நேரத்திலோ, அந்த நாளில் வேறு ஏதேனும் நேரத்திலோ ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது மிகவும் அப்பட்டமான சமஸ்கிருதத் திணிப்பாகும்.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் உள்ளூர் மொழிகளில் செய்திகள் ஒளிபரப்படுகின்றன. அவற்றில் உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவை உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் உள்ளன. தேசிய அளவிலான நிகழ்வுகள் ஆங்கிலச் செய்திகளில் விரிவாக வழங்கப்படுகின்றன. ஆனால், தேசிய அளவிலான சமஸ்கிருத செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் எதுவும் இருக்காது. எனவே, சமஸ்கிருத செய்திகளை பார்க்க வேண்டிய தேவை மாநில மொழி பேசும் மக்களுக்கு இல்லை. அவ்வாறு இருக்கும் போது, சமஸ்கிருத மொழிச் செய்திகளை ஒளிபரப்ப கட்டாயப்படுத்துவது தான் சமஸ்கிருதத் திணிப்பு ஆகும்.

இந்தியாவில் சுமார் 14,000 பேர் மட்டுமே சமஸ்கிருதத்தைப் பேசுவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அவர்களுக்காக அவர்களின் மொழியில் தூர்தர்ஷனின் தேசிய அலைவரிசையில் தினமும் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதுவே தேவைக்கும் அதிகமானது. ஆனால், அதற்கும் கூடுதலாக அனைத்து மாநில மொழி அலைவரிசைகளும் சமஸ்கிருத செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்பது தேவைகளைச் சார்ந்ததாக தெரியவில்லை; மாறாக, சமஸ்கிருதம் பேசாத, அம்மொழி செய்திகளை பார்க்க விரும்பாத மக்கள் மீது சமஸ்கிருதத்தை கட்டாயப்படுத்தி திணிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் இரு வகையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். முதலில் தினமும் 15 நிமிடங்களுக்கு சமஸ்கிருதம் பேசாத மக்கள் மீது சமஸ்கிருதம் திணிக்கப்படும்; அடுத்ததாக ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்களுக்கு தமிழ் உள்ளிட்ட மொழிகளின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் படும். இது சமஸ்கிருதம் பேசாத மக்கள் மீது நடத்தப்படும் மொழி மற்றும் கலாச்சாரத் தாக்குதல் ஆகும். எதிர்காலத்தில் இந்தியா என்பது ஒற்றை நாடு; அதில் இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே இரட்டை மொழிகள் என்ற நிலையை ஏற்படுத்துவதற்கான மொழி ஆதிக்கத்திற்கான தொடக்கமாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் அனைத்து  மொழி பேசும் மக்கள் மீதும், குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் மீது மத்திய அரசின் வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் நடவடிக்கைகள் அப்பட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி முதல் சென்னை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பில் ஒலிபரப்பாகும் 4 மணி நேர இந்தி நிகழ்ச்சிகளை தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அம்முயற்சி கைவிடப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படும் 2 நிமிட செய்திகள் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு மணி நேர இந்தி நிகழ்ச்சி திணிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக இப்போது  தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழி நிகழ்ச்சிகளை ரத்து செய்து சமஸ்கிருத செய்திகள் திணிக்கப்படுகின்றன.

ஜனநாயகம் என்பது அழகான தத்துவம் ஆகும். அதன் அடிப்படைத் தத்துவங்களில் மிகவும் முக்கியமானது அனைத்து மக்களின் விருப்பங்களையும், உரிமைகளையும் மதித்து அதில் தலையிடாமல் இருப்பது தான். ஆனால், அதற்கு மாறாக ஊடகங்கள் வழியாக சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வது ஜனநாயகத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது. எனவே, பொதிகை உள்ளிட்ட மாநில மொழி தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் சமஸ்கிருதத் செய்திகளை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, மாநில மொழி தொலைக்காட்சிகளில் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழி நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தை செறிவாக்கவும், செழுமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Sanskrit Language Implementation by Doordarshan Television


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->