கோயம்புத்தூர் || நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த கார் - பயணிகளின் கதி என்ன?
car fire accident in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டம் கணபதி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவர் இன்று மாலை தனது நண்பருடன் காரில் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி வரை சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூருக்குத் திரும்பி வந்துள்ளார். இதையடுத்து இவர் அன்னூர் அருகே வந்து கொண்டிருந்தபோது காரின் முன் பக்கமாக புகை வெளியேறியுள்ளது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சாமுவேல், சுதாரித்துக் கொண்டு உடனடியாக காரை சாலையோரம் நிறுத்தி விட்டு நண்பருடன் காரிலிருந்து வெளியேறி டாஷ்போர்டு பகுதியில் தண்ணீர் ஊற்ற முயற்சித்தார்.

அப்போது, திடீரென எஞ்சினில் தீப்பிடித்து கார் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே சாமுவேல் சம்பவம் குறித்து அன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் படி அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், இதுகுறித்து தகவலறிந்து வந்த அன்னூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் கார் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
car fire accident in coimbatore