ஆன்லைன் வர்த்தகத்தில் தொழில் அதிபரிடம் ரூ.2¼ கோடி மோசடி- 4 பேர் கைது!
Businessman defrauded of Rs. 2.25 crores in online trade 4 arrested
ஆன்லைன் வர்த்தகத்தில் தொழில் அதிபரிடம் ரூ.2¼ கோடி மோசடி செய்துவிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பதுங்கி இருந்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தியாகராயநகர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் கிஷோர் என்பவரின் வாட்ஸ்அப்புக்கு சமீபத்தில் வந்த குறுந்தகவலில் நாங்கள் ஆலோசனை கூறும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் மயங்கிய கிஷோர் பல்வேறு வங்கி கணக்குகளில் பல பரிவர்த்தனைகளில் ரூ.2 கோடியே 26 லட்சம் அனுப்பி முதலீடு செய்தார். ஆனால் ஆசை வலையில் விழுந்த அவருக்கு கடைசியில் லாப பணமும் கிடைக்கவில்லை, முதலீடு பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் மனம் நொந்து போன அவர் இந்த மோசடி குறித்து அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மோசடி கும்பல் பணத்தை சத்திய நாராயணன் , மணிவேல், ரோஷன், சிம்சேன் செல்லதுரை ஆகிய 4 பேரின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்ததை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பதுங்கி இருந்த அவர்கள் 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி திட்டம் வெளிநாட்டில் இருந்து அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டில் பதுங்கி உள்ள மோசடி கும்பலை கைது செய்யும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Businessman defrauded of Rs. 2.25 crores in online trade 4 arrested