அத்திப்பழம் போல பட்ஜெட்… வெளியே அழகு, உள்ளே சொத்தை...! -பட்ஜெட் தாக்கல் குறித்து எடப்பாடி கடும் விமர்சனம்
Budget fig beautiful outside empty inside Edappadi strongly criticizes budget presentation
எடப்பாடி கே. பழனிசாமி இன்று தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.அவர் தெரிவித்ததாவது,"கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றங்களால் சோர்வடையச் செய்த திராவிட முன்னேற்ற கழகம் அரசு, தனது ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை வெறும் விளம்பர ஆவணமாகவே தாக்கல் செய்துள்ளது.

மக்களை எப்படி தவறாக வழிநடத்துகிறது என்பதைக் காட்டுவதற்காகவே நாங்கள் ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டோம்.அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதி அளித்த பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் திமுக அரசு அவர்களை ஏமாற்றியுள்ளது.
பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அளித்த உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால பட்ஜெட் உரை, உள்ளடக்கமற்ற சொற்பொழிவாக மட்டுமே உள்ளது.வாக்குறுதிகள் நிறைவேறாததால் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து, மக்கள் அதிருப்தி வெளிப்படுத்தி வருகின்றனர்.
மாநில வருவாயில் சுமார் ரூ.26,000 கோடி குறைவு ஏற்பட்டிருந்தும் அதற்கான விளக்கம் சட்டசபையில் வழங்கப்படவில்லை. நிதி மேலாண்மை திறனின்மையால் மாநிலக் கடன் சுமை உயர்ந்துள்ளது.நிதி பற்றாக்குறையை சரிசெய்யாமல், மக்கள்மீது வரிச்சுமை ஏற்றுவதும் கடன் வாங்குவதும் சரியான தீர்வு அல்ல. சாதனைகள் எதுவும் இல்லாமல் வரி உயர்வே இந்த அரசின் ஒரே நடவடிக்கையாக உள்ளது.
நிதி பற்றாக்குறை அதிகரித்தால் அதன் பாரம் பொதுமக்களுக்கே விழும்.வெளியே பார்க்க அழகாக இருந்தாலும் உள்ளே பலவீனமாக இருக்கும் அத்திப்பழம் போலத்தான் இந்த பட்ஜெட்டும் உள்ளது. ஆண்டுக்கு 100 நாள் சட்டசபை நடத்துவோம் என்ற வாக்குறுதியும் காகிதத்தில் மட்டுமே இருந்து, மொத்தம் 140 நாட்களே நடத்தப்பட்டது.
மேலும், வேளாண்துறையில் நீர்வளத்துறையை இணைத்தது ஏன் என்பது கேள்விக்குறியாக உள்ளது. வேளாண் பட்ஜெட்டும் விவசாயிகளுக்கு நன்மை தராத ஏமாற்று ஆவணமாகவே உள்ளது. குறிப்பாக கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
English Summary
Budget fig beautiful outside empty inside Edappadi strongly criticizes budget presentation