போடாத சாலைக்கு ரூ. 8.5 லட்சம் பில்! லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர்!
Bill for the road not laid in the panchayat in kovai
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை ஊராட்சி ஒன்றியத்தின் சிக்கதாசம்பாளைம் ஊராட்சியில் போடாத சாலைக்கு ரூ.8.5 லட்சத்திற்கு பில் போட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக விமலாவும் துணைத்தலைவராக வினோத்குமார் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஊராட்சி ஏழு கிராமங்களை உள்ளடக்கிய பெரிய ஊராட்சியாக திகழ்கிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சேரன் நகரில் இரண்டாவது பாலத்தில் இருந்து மகாலட்சுமி அவெண்யூ வரை சாலை போட திட்டம் போடப்பட்டது. இதற்காக 8.5 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நீண்ட நாட்களாக சாலை போடவில்லை. இந்த சாலை போடப்பட்டது போல் ரசீது தயாரித்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் சாலை பணிகள் முடிக்கப்பட்டது போல் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் கையொப்பம் போடப்பட்டுள்ளது. மேலும் சாலை போட்டது போல் ஒப்பந்ததாரர் மூலம் புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து சிக்கதாம்பாளையம் மக்கள் போஸ்டர் அடித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் காதிற்கு எட்டவே இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ரூபாய் 8.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது அம்பலமானது. இதனை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் விமலா துணைத் தலைவர் வினோத் குமார் உட்பட ஐந்துபேர் மீது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Bill for the road not laid in the panchayat in kovai