போலி நகையை அடகு வைக்க முயற்சி! தஞ்சையில் சிக்கிய மோசடி மன்னன்...! - கையும் களவுமாக கைது செய்த காவலர்கள்..!
Attempt to pawn fake jewelry Fraud caught Thanjavur Cops arrested red handed
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் போலி தங்க நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் கூட்டாளிகளை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சிற்றம்பலம் கோவில் தெருவில் இயங்கி வரும் நகை அடகு நிறுவனத்திற்கு சம்பவத்தன்று வந்த நபர் ஒருவர், ஒரு பவுன் எடையுள்ள இரண்டு வளையல்களை அடகு வைத்து ரூ.60 ஆயிரம் கடன் வழங்குமாறு கேட்டுள்ளார். வழக்கமான நடைமுறையின்படி, கடை ஊழியர்கள் அவரது பெயர், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து சரிபார்த்தனர்.

அப்போது, அதே செல்போன் எண்ணைப் பயன்படுத்தி கடந்த ஜூலை 28-ஆம் தேதி 'குருவம்மா' என்ற பெயரில் 4 கிராம் எடையுள்ள மோதிரத்தை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் கடன் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், ஏற்கனவே அடகு வைக்கப்பட்டிருந்த மோதிரத்தையும், தற்போது கொண்டு வரப்பட்ட வளையல்களையும் பரிசோதனை செய்தனர்.
அந்த ஆய்வில், இரு நகைகளும் தங்க முலாம் பூசப்பட்ட போலி ஆபரணங்கள் என்பது உறுதியானது. இதையடுத்து கடை உரிமையாளர்களில் ஒருவரான கல்யாணசுந்தரம் உடனடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள், சந்தேகநபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் சேலம் பகுதியைச் சேர்ந்த விஜயன் (55) என்பது தெரியவந்தது.மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் தன்னை காரில் அழைத்து வந்து, இந்த நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுத் தருமாறு கூறியதாக விஜயன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்தனர். தொடர்ந்து, சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Attempt to pawn fake jewelry Fraud caught Thanjavur Cops arrested red handed