அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி..வழக்கறிஞர்கள் புகார்!
Attempt to grab government land through fake documents Lawyers complain
சிறுவானூர் கண்டிகையில் அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 22 சென்ட் நிலம் அதாவது சுமார் 5 கோடி மதிப்பிலான இடத்தினை அங்குள்ள நபர்கள் போலி ஆவணம் போலி அரசு முத்திரை போலி அரசு அதிகாரியின், கையெழுத்து போட்டு பட்டாவிற்கு வட்டாட்சியரின் போலியான கையெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலரும் மற்றும் வழக்கறிஞருமான நாகராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.
அந்த மனுவில் திருவள்ளூர் அடுத்த சிறுவானூர் கண்டிகை பகுதியில் உள்ள 22 சென்ட் நிலம், சுமார் 5 கோடி மதிப்பிலான அரசு இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், பாலாஜி, சின்னதுரை, நடராஜன், நரேஷ், பார்த்திபன், தமிழழகன் உள்ளிட்ட 8 பேர் அந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். அதோடு சட்ட விரோதமாக போலி அரசு முத்திரைகளை தயாரித்தும், அரசு அதிகாரிகளின் கையெழுத்துக்களை போலியாக போட்டும் ஆவணங்கள் தயார் செய்து திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதை சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
எனவே பாலாஜி மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய இருவர் மீது நில மோசடி தொடர்பாக பல வழக்குகள் திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கைகள் மேற்கொண்டு அரசு நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் போலி முத்திரைத்தாள் விவகாரம் இந்திய அளவில் பெரும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது திருவள்ளூரில் போலி முத்திரைத்தாள், போலி அரசு அதிகாரியின் கையொப்பம், அரசின் போலி முத்திரை தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Attempt to grab government land through fake documents Lawyers complain