இந்தியன் வங்கிக்கு அபராதம் விதித்த நீதிமன்றம் - நடந்தது என்ன?
court fine to indian bank in mannargudi
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பத்மசாலவர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் நாராயணன். ஆட்டோ ஓட்டுநரான இவர், மன்னார்குடி காந்தி சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் 2001 முதல் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். ஆனால், இவர் வேறொரு வங்கியில் புதிய ஆட்டோ வாங்குவதற்காக ரூ.3 லட்சம் லோன் கேட்டு கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி அன்று அணுகியபோது, அவரது சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சிபில் ஸ்கோர் குறைந்ததற்கு என்ன காரணம் என்று பார்த்த போது, அவர் சேமிப்பு கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கி கிளையில் 2002ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியில் மேலவாசல் இன்ப ராஜ் என்பவர் வாங்கிய ரூ.19 ஆயிரம் கடனுக்கு, நாராயணன் ஜாமீன்தாரராக கையெழுத்து போட்டதும், அந்த கடனை இன்பராஜ் செலுத்தாததால் தற்போது அதன் நிலுவைத் தொகை ரூ.42 ஆயிரமாக உள்ளதாகவும், அதைக் கட்ட வேண்டிய பொறுப்பு நாராயணனுக்கும் உண்டு என்பதால், அவரது சிபில் ஸ்கோர் குறைந்துள்ளது. அந்த தொகையை செலுத்தினால் மட்டுமே அவரது சிபில் ஸ்கோர் உயரும் என்று இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாத நாராயணன், வங்கி அதிகாரிகள் மீது 2025ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அன்று திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2002ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியில் மேலவாசல் இன்பராஜ் என்பவர் வாங்கிய 19 ஆயிரம் ரூபாய் கடன் தொடர்பான இந்தியன் வங்கியின் கடிதங்களை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் ஜமீன்தாரராக கையொப்பமிட்டது வேறு ஒரு என்.சீனிவாசன் என்பதும் அந்த சீனிவாசனின் விவரங்களுக்கு பதிலாக இந்த ஆட்டோ ஓட்டுநரான சீனிவாசன் மகன் நாராயணனின் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட விபரங்களை சிவில் நிறுவனத்துக்கு வங்கி பகிர்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, நாராயணனுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கடனில் அவர் ஜாமீன் கையெழுத்து போட்டதாக சிபில் நிறுவனத்துக்கு தெரிவித்துவிட்டு, நீதிமன்றத்தில் அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்று பொய்யான தகவலைக் கூறியதற்காக இந்தியன் வங்கி சீ.நாராயணனுக்கு முப்பது நாட்களுக்குள் நஷ்ட ஈடாக ரூ.3 லட்சம், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
court fine to indian bank in mannargudi