'24 மணி நேரத்திற்குள் கைது; போக்சோ வழக்கு பதிவு': கோவை சிறுமி கொலை வழக்கில் மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி அதிரடி விளக்கம்!
Arrested Within 24 Hours POCSO Invoked West Zone IG Ramya Bharati Outlines Coimbatore Child Murder Case Progress
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையின் துரித நடவடிக்கைகள் குறித்து மேற்கு மண்டல ஐஜி (IG) ரம்யா பாரதி ஐபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடி விளக்கங்களை அளித்துள்ளார்.
துரிதமாகச் செயல்பட்ட காவல் துறை:
செய்தியாளர்கள் சந்திப்பில் ஐஜி ரம்யா பாரதி விவரித்த சம்பவத்தின் காலவரிசை: உடனடிப் புகாரும் வழக்கும்: "சம்பவத்தன்று மாலை 6 மணிக்குக் குழந்தையைக் காணவில்லை என '100' என்ற அவசர எண்ணிற்குத் தகவல் வந்தது. உடனடியாகச் செயல்பட்டு, இரவு 10 மணிக்கே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைத் தேட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சிசிடிவி துப்பு: அப்பகுதியிலுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்தி, ஆசை வார்த்தைகளைக் கூறி சிறுமியைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது கண்டறியப்பட்டது. சிறுமியைத் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்துள்ளது விசாரணையில் உறுதியானது."
குற்றவாளிகள் கைது மற்றும் போக்சோ சட்டம்:
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட பிரதான குற்றவாளி கார்த்தி மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் பதுங்கியிருந்த இடத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
தப்பியோடியபோது எலும்பு முறிவு: பதுங்கியிருந்த குற்றவாளியைப் போலீசார் மடக்கிப் பிடித்தபோது, அவன் போலீஸ் காவலில் இருந்து தப்பியோட முயன்றான். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவனது வலது கை மற்றும் காலில் பலத்த எலும்பு முறிவு (Fracture) ஏற்பட்டுள்ளது.
விரைவான தண்டனைக்கு உறுதி:
குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே இரு முக்கியக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. "குற்றவாளிகளை எவ்வளவு விரைவாகக் கைது செய்தோமோ, அதே வேகத்தில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையும் (Charge sheet) மிக விரைவாகத் தயாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும். முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, இந்த வழக்கின் அடுத்தகட்ட விவரங்கள் சட்டப்பூர்வமாக வெளியிடப்படும்" என்று ஐஜி ரம்யா பாரதி உறுதியளித்தார்.
English Summary
Arrested Within 24 Hours POCSO Invoked West Zone IG Ramya Bharati Outlines Coimbatore Child Murder Case Progress