சென்னையில் மீண்டும் நகைப்பறிப்பு...! பட்டப்பகலில் தனியார் நிறுவன அதிகாரியிடம் சங்கிலி பறிக்கப்பட்டதால் பரபரப்பு...!
Another jewellery robbery Chennai chain snatched from private company official broad daylight
சென்னை மயிலாப்பூரில் சாலையில் நடந்து சென்ற தனியார் நிறுவன அதிகாரியை குறிவைத்து நடைபெற்ற தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞரை காவலர்கள் கைது செய்து, பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (58). மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் இவர், அலுவலகப் பணி தொடர்பாக கடந்த 18-ஆம் தேதி சென்னை வந்துள்ளார்.அப்போது மயிலாப்பூர் ஆர்.கே. சாலையில் கோபால கிருஷ்ணன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில், ஒரு பெண் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நிலையில், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென கோபால கிருஷ்ணனின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நபர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பெண்ணுடன் அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து கோபால கிருஷ்ணன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய காவலர்கள், தங்கச் சங்கிலியை பறித்ததாகக் கூறப்படும் புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது உசேன் (27) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து பறிக்கப்பட்ட 2 பவுன் தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டது.மேலும், சம்பவத்தின்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் முகமது உசேனின் மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை காவலர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
English Summary
Another jewellery robbery Chennai chain snatched from private company official broad daylight