காவல்துறை நாய்களே கோஷத்திற்கு அண்ணாமலை கண்டனம்..!!
Annamalai condemns slogan TNpolice as adog
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர் ஆரணி நகர காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை சாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் மூலம் நேற்று ஜாமனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பாஸ்கரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த ஊர்வலம் ஆரணி நகர் காவல் நிலையம் அருகே வரும் பொழுது காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் கோஷமிட்டு விமர்சனம் செய்திருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 13 பேரை கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறையினரை இழிவாக பேசியதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், “காவல் நாய்களே”, “எச்சைப் பிழைப்பு”, போன்ற கோஷங்களை எழுப்புவது காக்கி சட்டைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை இதுபோன்ற அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.ஓரிரு காவலர்கள் செய்யும் தவறுகளுக்கு, ஒட்டு மொத்த காவல்துறையினரை அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

தங்களது உயிரை துச்சமாகக் கருதி, மக்களை காக்க உழைக்கும் காவல்துறையினரை, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், அரசியல் காரணங்களுக்கும் இது போன்று அவதூறாகப் பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவல்துறையினரின் மன உறுதியை குறைக்கும் வகையில் கோஷங்களை எழுப்பும் தங்களது கூட்டணி கட்சியினர் மேல், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai condemns slogan TNpolice as adog