அதிமுகவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை..முதலமைச்சரை சாடிய அன்பழகன்!
Anbazhagan criticized the Chief Minister without mentioning anything about the ADMK
அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்ததில் இருந்து தோல்வி பயத்தில் நடுக்கத்துடன் திமுக முதல்வர் காணப்படுகிறார் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்..
கூட்டணி கட்சியின் துணையின்றி சொந்த காலில் நின்று அரசியல் நடத்த முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அதிமுகவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்ததில் இருந்து தோல்வி பயத்தில் நடுக்கத்துடன் திமுக முதல்வர் காணப்படுகிறார். 12 கூட்டணி கட்சிகளுடன் ஒளிந்துகொண்டு அற்ப அரசியலை திமுக தலைவர் நடத்துவது மக்களிடம் இனிமேல் எடுபடாது. தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்தின் அவல நிலை சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, லாக்கப் மரணங்கள், பாலியல் வன்முறைகள், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் உபயோகம், கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தமிழகத்தின் காவிரி உரிமையை விட்டுக்கொடுப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறிவரும் எங்கள் கழக பொதுச்செயலாளரின் ஆணித்தரமான ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க திராணியற்ற அரசியல்வாதியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.
தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு ஆங்காங்கே மக்கள் அளிக்கும் வரவேற்புக்களை பொருத்துக்கொள்ள மனமில்லாத தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கற்பனையான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பாலைவனமாக்கும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உறுதியான நிலைபாட்டை எடுத்து அதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகிறது. நேற்று கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் டெல்லிக்கு சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவது சம்பந்தமான விரிவான திட்ட அறிக்கையை வழங்கி உள்ளனர். அதை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி பாயும் எந்த இடத்திலும் புதியதாக அணை கட்டக்கூடாது என காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை அமல்படுத்துவதில் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களை பின்பற்றி கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களும் உறுதியாக எதிர்த்தார். அதிமுக பாஜக கூட்டணி இருந்த போதே மேகதாது அணை கட்டும் பணியான கர்நாடக பாஜக அரசின் செயல்திட்டத்தை உறுதியாக மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் எதிர்த்தார். ஆனால் கர்நாடக காங்கிரஸ் அரசின் எந்த செயலையும் எதிர்க்க துணிவில்லாத பலகீனமாக முதல்வராக திமுக முல்வர் ஸ்டாலின் உள்ளார்.
டாஸ்மாக் ஊழல் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டில் இருந்து தனது மகன் உதயநிதியை காப்பாற்ற டெல்லி சென்று பிரதமரை சந்தித்து சரணாகதி அடைந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இன்று வரை மேகதாது அணை கட்டும் கர்நாடக முயற்சியை தடுத்து நிறுத்த ஏன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்திக்க டெல்லிக்கு செல்லவில்லை.
கூட்டணி அரசில் ஆதாயத்திற்காக ஒட்டுமொத்த தமிழக மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்கு துரோகத்தை ஸ்டாலின் இழைத்து வருகிறார். கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக டெல்லியில் முகாமிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுட்டு இருக்கும் போது தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அரசு விழாக்கள் என்ற பெயரில் போட்டோ சூட் நடத்தி வருகின்றனர்.
நம் தமிழ் சமுதாயத்திற்கு துரோகம் விளைவிக்கும் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் துணிவு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உள்ளதா? தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது அணைகட்டும் காங்கிரசுடன் ஒட்டுமில்லை, உறவும் இல்லை என அறிவிக்கும் திராணி தமிழக முதல்வருக்கு உள்ளதா? கேவலம் ஓட்டுவங்கி அரசியலுக்காக நம் தமிழ் சமுதாயத்திற்கு துரோகம் விளைவிக்கும் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக கூட்டணியை பற்றி வாய்கிழிய வசைபாடுவதில் என்ன நியாயம் இருக்கிறது.
தேர்தலில் போட்டியிடாத ராமலிங்கம் பாஜக மாநில தலைவராக எப்படி நியமிக்கலாம் என பாஜக தலைமையை காங்கிரஸ் கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் கேள்வி கேட்கிறார். தேர்தலில் நிற்காமல் புதுச்சேரி முதல்வராக திரு.நாராயணசாமியும், அதே போன்று தேர்தலில் போட்டியிடாமல் நம் நாட்டின் பிரதமராக மன்மோகன்சிங் அவர்களும் காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்டது எப்படி என்பதை வைத்தியலிங்கம் தெரிவிக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
English Summary
Anbazhagan criticized the Chief Minister without mentioning anything about the ADMK