திமுகவின் திடீர் போராட்டம் ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி - அதிமுக தரப்பில் கண்டனம்! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட கிளை அணிகள் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. 

அரியலூர் அனிதாவில் ஆரம்பித்த நீட் மரணம், குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வரை தொடர்கிறது. 

இந்த மரணங்கள் அனைத்துக்கும், மத்திய பாஜக அரசும், அவர்களுக்கு அடிமைச்சேவகம் செய்யும் அதிமுகவினரும் , நீட் பாதுகாவலர் ஆளுநர் ரவியுமே காரணம். 

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். 

கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. ஒரு மாநில அரசால் நீட்டை ரத்து செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அவை அனைத்தையும், முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது.மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர், பிப்ரவரி 2, 2022 அன்று நீட் விலக்கு மசோதாவினை சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பிப்ரவரி 8, 2022 அன்று மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு ஆளுநர் ரவி மே 5, 2022 அன்று அனுப்பி வைத்தார்.

இப்படி தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு ஒருபுறம் எடுத்து வருவதும், ஆளுநர் அதனைத் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. 

நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், நீட் பிரச்சினையை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நேரத்தில் மாணவச்செல்வங்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான், நீட் தேர்வு என்பது நிரந்தரம் கிடையாது.

தமிழக முதல்வர் நிச்சயம் நீட் தேர்வை ஒழிப்பார். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே, மாணவச்செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் பொறுமை காத்திருக்க வேண்டுகிறோம். 

எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும், இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து, இந்த மாபெரும் உண்ணாவிரதம் தமிழகமெங்கும் நடைபெறவுள்ளது." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுகவின் பிரமாண்ட மாநாடு வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், திமுகவினரின் இந்த நீட் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் 20-ம் தேதி நடத்த உள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஓர் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar condemn to DMK for Aug Protest


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->