சத்தமே இல்லாமல் ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்! வேளச்சேரியில் களமிறங்கும் விஜய்?தவெகவின் ‘மாஸ்டர் பிளான்’ இதுதான்!
Vijay started the game without any noise Vijay to bat in Velachery This is Tvk master plan
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநில அரசியல் களம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாதபோதிலும், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இதை அரசியல் விமர்சகர்கள் ஒரு “மாஸ்டர் பிளான்” என வர்ணிக்கின்றனர்.
தலைநகர் சென்னையிலேயே தனது முதல் தேர்தல் வெற்றியை பதிவு செய்து, பாரம்பரிய திராவிடக் கட்சிகளின் கோட்டையில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பதே விஜயின் நோக்கமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை அரசியலைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவின் செல்வாக்கு கணிசமாக சரிந்துள்ளது. 1991 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளைத் தவிர, பெரும்பாலான தேர்தல்களில் திமுகவே சென்னையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது சென்னையில் அதிமுகவுக்கு பெரிய முகங்கள் இல்லாத நிலையில், அந்த வெற்றிடத்தை நிரப்பும் மாற்று அரசியல் சக்தியாக தவெக தன்னை முன்வைக்க முயல்கிறது.
விஜயின் சமீபத்திய உரைகளில், 2026 தேர்தலை அவர் மும்முனைப் போட்டியாக அல்லாமல், திமுக – தவெக இடையிலான நேரடி அரசியல் மோதலாகவே மாற்ற விரும்புவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையில், சில தொகுதிகளைத் தவிர பெரும்பாலான இடங்களில் திமுகவுக்கு நேரடி சவாலாக தவெக உருவெடுக்கலாம் என்ற மதிப்பீடு நிலவுகிறது.
விஜய் வேளச்சேரியைத் தேர்வு செய்யக் காரணமாக பல அம்சங்கள் முன்வைக்கப்படுகின்றன. வேளச்சேரி தொகுதியில் அதிக அளவில் இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அரசியல் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களாகக் கருதப்படுவதால், அது விஜய்க்கு சாதகமாக அமையலாம். மேலும், சென்னையில் போட்டியிடுவதன் மூலம் நகர்ப்புற வாக்காளர்களிடையே தனது பிம்பத்தை வலுப்படுத்த முடியும் என்பதும் அவரது கணக்கில் இருக்கலாம்.
அதிமுகவின் பின்னடைவும் தவெகவுக்கு ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. சென்னை மாநகர அரசியலில் அதிமுக பலவீனமடைந்துள்ள நிலையில், அந்த இடத்தை பிடித்து திமுகவுக்கு நேரடி போட்டியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் விஜய் செயல்படுவதாக கூறப்படுகிறது. அதிமுக தனது அரசியல் வியூகத்தை மாற்றி சென்னையை மீண்டும் முக்கிய இலக்காக எடுத்துக்கொள்ளாத வரை, சென்னையில் திமுக – தவெக இடையேதான் கடும் போட்டி நிலவும் என அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
“2026 தேர்தல் என்பது ஊழலுக்கு எதிரான ஜனநாயகப் போர்” என்ற முழக்கத்துடன் களம் இறங்கும் விஜய், திராவிட அரசியலுக்கு ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர உறுதியாக இருப்பதாக தவெக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வேளச்சேரியில் விஜய் போட்டியிடுவது உறுதியானால், அந்தத் தொகுதி 2026 தேர்தலின் மிக முக்கியமான ‘நட்சத்திர தொகுதியாக’ மாறும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இதே நேரத்தில், தவெகவுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளூர் அளவிலான நிர்வாக கட்டமைப்பு குறைபாடு குறிப்பிடப்படுகிறது. ரசிகர்கள் பெருமளவில் இருந்தாலும், தேர்தல் களத்தில் தீவிரமாக வேலை பார்க்கும் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் சென்னையில் போதிய அளவில் இல்லை என்பதே தவெகவின் முக்கிய பலவீனமாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
English Summary
Vijay started the game without any noise Vijay to bat in Velachery This is Tvk master plan