வடசென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு...! மாதவரம் பண்ணையில் தொழிலாளர் குளறுபடியால் விநியோகம் முடக்கம்...!
Aavin milk shortage North Chennai Supply disrupted labor unrest Madhavaram farm
சென்னை மாதவரம் பால் பண்ணையில் நிலவிவரும் ஒப்பந்தத் தொழிலாளர் குளறுபடிகளால், வடசென்னை மக்களின் அத்தியாவசியத் தேவையாக விளங்கும் ஆவின் பால் விநியோகம் முற்றிலுமாகத் தடம் புரண்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள கண்டன அறிக்கையில், நிர்வாகச் சீர்கேடுகளால் ஏற்பட்டுள்ள இந்த அவல நிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் மாதவரம் பண்ணையின் பழைய ஒப்பந்தம் காலாவதியான நிலையில், சோழிங்கநல்லூர் பண்ணையை நிர்வகிக்கும் புதிய ஒப்பந்ததாரரிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், பண்ணையை இயக்கத் தேவையான 50-க்கும் மேற்பட்ட ஆட்களைத் திரட்ட முடியாமல், வெறும் 8 ஊழியர்களை மட்டுமே வைத்துக்கொண்டு நிர்வாகம் காலம் தள்ளி வந்துள்ளது.
இந்தத் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட, கடந்த ஒரு வாரமாக வாகன ஓட்டுநர்களும் உதவியாளர்களுமே கூடுதல் சுமையை ஏற்று பால் பெட்டிகளை அடுக்கும் பணிகளைச் செய்து வந்தனர்.
இருப்பினும் ஒப்பந்ததாரரின் மெத்தனப் போக்கையும், ஆவின் நிர்வாகத்தின் பாராமுகத்தையும் கண்டித்து வாகன ஓட்டுநர்கள் இந்தப் பணிகளைப் புறக்கணித்ததால், இன்று வடசென்னையின் பெரம்பூர், கொளத்தூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் 60 சதவீதத்திற்கும் மேல் முடங்கிப்போனது.
மாற்று ஏற்பாடாக அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பண்ணைகளுக்கு வாகனங்கள் திருப்பி விடப்பட்டும், விநியோகச் சங்கிலி உடைந்ததால் பொதுமக்கள் பெரும் தவிப்பிற்குள்ளாகினர்.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வரும், பால்வளத்துறை அமைச்சரும் போர்க்கால அடிப்படையில் தலையிடாவிட்டால், நாளை வடசென்னை முழுவதும் பால் இன்றி ஒரு சொட்டுப் பாலும் கிடைக்காத இருண்ட நிலை உருவாகும் என அவர் எச்சரித்துள்ளார்.
முடங்கிக் கிடக்கும் பால் உற்பத்தியைச் சீரமைத்து, பால் முகவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியை உடனடியாகக் களைந்திட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
English Summary
Aavin milk shortage North Chennai Supply disrupted labor unrest Madhavaram farm