எச்சில் துப்பியதை தட்டிக் கேட்ட நபருக்கு நடந்த கொடூரம்; இளநீர் வியாபாரியின் வெறிச்செயல்; கதிகலங்க வைத்த சம்பவம்..!
A tender coconut vendor chopped off the hand of a man who was caught spitting in Thanjavur
திருவாரூர் மாவட்டம் கீரங்குடி பகுதியைச் சேர்ந்தவர் 58 வயதான அந்தோணி. இவர் பிரசவத்திற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மருமகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்பு புதன்கிழமை இரவு 10 மணியளவில் தனது உறவினர் அறிவழகன் என்பவருடன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது உமா மகேஸ்வரபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் மது போதையில் அங்கு வந்துள்ளார். அவர் இளநீர் வியாபாரி என்பதால் தனது இடுப்பிலேயே கூர்மையான அரிவாளை சொருகி வைத்திருந்துள்ளார். மது போதையில் இருந்த மோகன் வெற்றிலை பாக்கு போட்டு எச்சிலை துப்பிக் கொண்டிருந்துள்ளார்.
அவ்வாறு தொடர்ந்து அவர் எச்சில் துப்பியதால் அங்கு அமர்ந்திருந்த அந்தோணி மற்றும் அறிவழகன் மீது எச்சில் தெரிந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி ஏன் எச்சில் துப்பினாய்? என கேட்டுள்ளார்.
அப்போது மதுபோதையில் இருந்த இளநீர் வியாபாரி ஏக வசனம் பேசி அந்தோணியிடம் வம்பிழுத்துள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாகியுள்ளது. அதில் ஆத்திரமடைந்த இளநீர் வியாபாரி இடுப்பில் வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்தோணியை நோக்கி வீசியுள்ளார்.
உடனே தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக கை வைத்து அந்தோணி தடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், இளநீர் வெட்ட பயன்டுத்தப்படும் கூர்மையான அரிவாளால் ஓங்கி வெட்டியதில் அந்தோணியின் கை மணிக்கட்டு துண்டாகி தரையில் விழுந்துள்ளது. இதனால் அந்தோணி வலியால் கதறி துடித்துள்ளார்.
தொடர்ந்து அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையிலேயே அனுமதித்தனர். துண்டிக்கப்பட்ட மணிக்கட்டையும் எடுத்துக் கொண்டு ஓடியுள்ளனர். கும்பகோணம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்தோணி அனுப்பி வைக்கப்பட்டார். இருந்தபோதும் கை துண்டிக்கப்பட்டு நீண்ட நேரமானதால் கையை மீண்டும் இணைக்க முடியாமல் போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மருத்துவமனைகளில் துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் இணைக்கும் அளவிற்கு போதிய மருத்துவ தொழில்நுட்பம் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், அந்தோணி தனது கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனிடையே மது போதையில் இருந்த இளநீர் வியாபாரியை பொதுமக்களே பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார், கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
A tender coconut vendor chopped off the hand of a man who was caught spitting in Thanjavur