7 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்...நேபாளத்தில் அதிர்ச்சி!
7 thousand prisoners escape Shock in Nepal
நேபாளத்தில் கடந்த 2 நாட்களாக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 7 ஆயிரம் கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் நேற்று முன் தினம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக போராட்டம் செய்தனர்.குறிப்பாக, சமூகவலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை பாதுகாப்புப்படையினர் தடுக்க முற்பட்டதால் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்தனர்.இந்த கலவரம் நாடு முழுவதும் பரவியதையடுத்து நாடாளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
அரசுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்த நிலையில் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து நேபாளத்தில் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.அதனை தொடர்ந்து நேபாளம் ராணுவம் கட்டுப்பாட்டில் சென்றுள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 7 ஆயிரம் கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறைகளில் இருந்து தப்ப முயன்றதாக 5 இளஞ்சிறார்கள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தப்பியோடிய 7 ஆயிரம் கைதிகளை மீண்டும் கைது செய்ய ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
7 thousand prisoners escape Shock in Nepal