சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல்.!!
35 crores worthable drugs seized in chennai airport
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், பெருமளவு போதைப்பொருள் கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் சுற்றுலா விசாவில் கம்போடியா நாட்டுக்கு சென்றுவிட்டு, சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு திரும்பி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் உடைமைகளை பரிசோதித்ததில் ரூ.35 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ கொகைன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதனை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், வாலிபரை கைது செய்து தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர் சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பதும், அவர் கடத்தி வந்த போதைப்பொருளை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள 2 போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
35 crores worthable drugs seized in chennai airport