அடுத்த வருடமே தேர்தல், அதிமுக ஆட்சி - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு!
2024 Also TN Assembly Election say ADMK EPS
விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, "கழக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளை தொடுத்து, கழகத்தையும் முடக்கி விடலாம் என்று சிலர் கனவு காண்கிறார்கள்.
அது கானல் நீராகத்தான் போகும். அதிமுக தொடங்கப்பட்ட காலம் முதலே சோதனைகளை சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம். எத்தனை சோதனைகளை சந்தித்தாலும் தொண்டர்கள், நிர்வாகிகளால் இந்த இயக்கம் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது.

அதிமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
மத்தியில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதை சுட்டிக்காட்டி வருகிறார்கள். எனவே வருகின்ற 2024 மக்களவை பொதுத் தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் வரும்.
நமக்கு விடிவுகாலம் பிறக்கும். ஒளிமயமான எதிர்காலம் நமக்கு உண்டு. எனவே கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் பொறுப்பாக செயல்பட்டு, மீண்டும் அதிமுகவை ஆட்சி மலர பாடுபடுவோம். வெற்றி பெறுவோம். அதுவே நமது லட்சியம்.

விழுப்புரம் மாவட்டம் அண்ணா திமுகவின் கோட்டை. மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் மிக சிறப்பான வரவேற்பு இங்கே கொடுத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
English Summary
2024 Also TN Assembly Election say ADMK EPS