தியேட்டர் தராததால் சல்லியர்கள் படத்தை ஓடிடி-யில் நேரடியாக ரிலீஸ் செய்தார் சுரேஷ் காமாட்சி
Suresh Kamatchi released the film Salliyar directly on OTT due to the lack of theaters
கிட்டு இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடித்துள்ள ‘சல்லியர்கள்’ திரைப்படம், போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் இன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்து மண்ணில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், ஜனவரி 1 புத்தாண்டன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவில் தியேட்டர் ஒதுக்கீடு கிடைக்காததால், படத்தின் திரையரங்கு வெளியீடு தடைபட்டது.
‘சல்லியர்கள்’ படத்திற்கு மொத்தமாக 27 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதாக அறிவித்தார். தற்போது இந்த படம் OTT PLUS என்ற தளத்தில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,“வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் ‘சல்லியர்கள்’ படத்தை ஜனவரி 1 அன்று வெளியிட திட்டமிட்டோம். ஆனால் வெறும் 27 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தன. இன்றைய சூழலில் சிறிய படங்களின் நிலை இதுதான்.
தமிழ் மக்கள் சார்ந்து, ஈழப் போராட்டத்தை மையமாக வைத்து எங்களுடைய மக்களுக்காக எடுத்த படத்தை வெளியிட இவ்வளவு போராட வேண்டியுள்ளது. குறிப்பாக பிவிஆர் திரையரங்குகள் ஒரு தியேட்டர் கூட தரவில்லை. பெரிய படங்களுக்கு தரப்படும் மரியாதை, சிறிய படங்களுக்கு கிடைக்காதது ஒரு நவீன தீண்டாமை. இன்று எனக்கு நடந்தது, நாளை இன்னொரு தயாரிப்பாளருக்கு நடக்கலாம். உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் ‘சல்லியர்கள்’ படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும்” என மன வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல திரைப்பிரபலங்கள் ‘சல்லியர்கள்’ படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் சேரன் தனது சமூக வலைதள பதிவில்,“OTT Plus தளத்தில் ‘சல்லியர்கள்’. தம்பி கிட்டு இயக்கத்தில், ஈழத்து மண்ணில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவிய படைப்பு. திரையரங்குகள் சரியாக கிடைக்காததால் நேரடியாக ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். இதற்கு நாம் தரும் ஆதரவே இன்னும் நல்ல படங்கள் உருவாக வழிவகுக்கும்”என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் #சல்லியர்கள் என்ற ஹேஷ்டேக் வேகமாக டிரெண்டாகி வருகிறது. சிறிய படங்களுக்கு திரையரங்குகளில் இடம் மறுக்கப்படுவது குறித்து மீண்டும் ஒரு முறை திரையுலகில் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ள ‘சல்லியர்கள்’, ஓடிடி வெளியீட்டின் மூலம் ரசிகர்களை சென்றடையத் தொடங்கியுள்ளது.
English Summary
Suresh Kamatchi released the film Salliyar directly on OTT due to the lack of theaters