ரூ.15 கோடி சர்ச்சை! நடிகர் விஜய் வருமான வரித்துறை மோதல் உச்சம்! - கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு
15 crore controversy Actor Vijay clash Income Tax Department reaches its peak Court verdict postponed
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.
அப்போது ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அந்த ஆண்டுக்கான வருமான கணக்கில் விஜய் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் வருமானம் என பதிவு செய்திருந்தார்.

ஆனால் 2015–2016 நிதியாண்டுக்கான மதிப்பீட்டின் போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் கணக்குகளை ஒப்பிட்டு ஆய்வு செய்த அதிகாரிகள், ‘புலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் சேர்க்காமல் மறைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, வருமானத்தை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்து, கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்தது.
இந்த அபராத உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த வழக்கு நேற்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இறுதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த விசாரணையின் போது விஜய் தரப்பில், “சட்டப்படி அபராத உத்தரவு 2019-ம் ஆண்டு ஜூன் 30-க்குள் பிறப்பிக்கப்பட வேண்டியது.
ஆனால் சுமார் 3 ஆண்டுகள் தாமதமாக 2022-ம் ஆண்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதம். எனவே அபராத உத்தரவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என வலுவாக வாதிட்டனர்.
இதற்கு பதிலளித்த வருமான வரித்துறை தரப்பு, “வருமான வரி மதிப்பீட்டுக்கு எதிரான அப்பீல் முடிந்த பிறகு, சட்டத்தில் குறிப்பிடப்பட்ட 6 மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தது முறையான நடவடிக்கையே. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டது.இருதரப்பு வாதங்களையும் கவனமாக கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
English Summary
15 crore controversy Actor Vijay clash Income Tax Department reaches its peak Court verdict postponed