திருப்புவனம் அருகே கி.பி.12-ஆம் நூற்றாண்டு கால பெருமாள் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிப்பு; பிற்காலப் பாண்டியர் காலத்து புதைந்துபோன கோயில் குறித்து ஆய்வு..! - Seithipunal
Seithipunal


 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பெருமாள் கோயில் கல்வெட்டு மற்றும் சிலைகள் திருப்புவனம் அருகே, அம்பலத்தாடி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பழமையான கோயில் அழிந்ததும், புதுப்பிக்கப்பட்டதும் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. 

தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, மதுரை காமராசர் பல்கலைக்கழக சமயங்கள், தத்துவம் மற்றும் மனிதநேயச் சிந்தனைப்புல முதுகலை மாணவர் வினோத் ஆகியோர் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அம்பலத்தாடி கிராமத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்ட போது புதைந்துபோன கோயில் கல்வெட்டு, சிலைகளை கண்டறிந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பலத்தாடி கிராமத்தில் கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதைந்த பாண்டியர் காலக் கல்வெட்டு, பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் உள்ளிட்ட 10 வகையான சிலைகள், சிதைந்து உருக்குலைந்து போன நிலையில் கண்டறியப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இந்த ஆய்வின் மூலம் அம்பலத்தாடி கிராமம் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில், சதுர்வேதி மங்கலமான பிராமணக் குடியிருப்பாக இருந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இப்பகுதியில் உள்ள பெருமாள் கோயிலை வழிபட்டும் பராமரித்தும் வந்திருக்கின்றதாகவும், அவர்கள் காலப்போக்கில் இடம்பெயர்ந்து சென்றதாலும் பிற காரணங்களாலும் இக்கோவில் வழிபாடின்றி சிதலமடைந்துவிட்டதை ஆய்வுகளின் மூலம் அறிய முடிகிறது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இக்கோயில் மூலவரான பெருமாள் சிலை, சிதைந்த நிலையில் 72 செ.மீ உயரம், 38 செ.மீ அகலத்துடன் காணப்படுகிறதாகவும்,  தலைப்பகுதிக்கு மேல் சேதமடைந்துள்ளதோடு, இந்த சிலையில் பின்னிரு கைககளில் சங்கு, சக்கரம் உள்ளது. வலது முன்கை அபய முத்திரையுடனும், இடதுமுன்கை கட்டிய வலம்பித முத்திரையுடனும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். அத்துடன்,  ஸ்ரீ தேவி, பூதேவி சிலைகள் முற்றிலும் சிதைந்துள்ளன. கழுத்தணிகள், கையணிகள், தோளணிகளுடன் சிலை வடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தலையில் கிரீடத்துடன் கூடிய கருடாழ்வார் சிலை, தொடைக்குக் கீழ்ப்பகுதி முற்றிலும் சிதைந்த நிலையில் கிடைக்கிறதாகவும், கோயிலின் சிதைந்த பாகங்கள் ஊரில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன என்று ஆய்வு செய்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது கி.பி.12-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் கூடிய 02 வரி துண்டு கல்வெட்டு, உடைந்து உருக்குழைந்து போய் காணப்படுகிறதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், ‘ஒன்று’ என்ற சொல்லைத் தவிர வேறு எதையும் படிக்க முடியவில்லை என்றும், இங்கு மேற்கொண்ட ஆய்வில் இரண்டு பெருமாள் சிலைகள், இரண்டிரண்டு ஸ்ரீதேவீ, பூதேவி சிலைகள் கிடைப்பதாலும் அவை வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருப்பதாலும், முன்பு இங்கிருந்த பெருமாள் கோயில் அழிவுற்றதால் அது புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் புதுப்பிக்கப்பட்ட அக்கோயில் மீண்டும் அழிவுற்றது என்பதை அறிய முடிகிறது’ என்றும்,  இந்த கோயில் சிதைவு பற்றிய மேலதிக ஆய்வுகள் தொடர்வதாக தொல்லியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12th century AD idols including Perumal discovered near Thiruppuvanam


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->