அடுத்த ஜி20 மாநாடு: தென் ஆப்பிரிக்காவுக்கு அழைப்பு விடுக்காத ட்ரம்ப்; காரணம் என்ன..?
Trump not inviting South Africa to the next G20 summit
அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள, 'ஜி - 20' உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாது என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜி - 20 நாடுகள் என்பது பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு சர்வதேச அமைப்பு. இதில், இந்தியா, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.
நடப்பாண்டுக்கான ஜி - 20 நாடுகளின் தலைமை பொறுப்பை தென் ஆப்ரிக்கா வகிக்கிறது. இதைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 01-ஆம் தேதி முதல் அடுத்தாண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை அடுத்தாண்டுக்கான ஜி - 20 தலைமை பொறுப்பை அமெரிக்கா ஏற்கவுள்ளது. மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், வெள்ளை இன மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக கூறி, தென் ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உச்சி மாநாட்டை, அமெரிக்க அதிபர் டிரம்ப் புறக்கணித்தார்.

ஜி - 20 மாநாட்டின் முடிவில், தலைமை பொறுப்பை அமெரிக்க துாதரகத்தின் மூத்த பிரதிநிதியிடம் ஒப்படைக்க தென் ஆப்ரிக்கா மறுத்து விட்ட நிலையில், அடுத்தாண்டு புளோரிடா மாகாணம் மியாமியில் நடைபெறும் ஜி - 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க, தென் ஆப்ரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், உலகின் எந்தவொரு அமைப்பிலும் உறுப்பினராக இருக்க தகுதியற்ற நாடு என்பதை தென் ஆப்ரிக்கா நிரூபித்து விட்டதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இவை தவிர, தென் ஆப்ரிக்காவுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவிகள் மற்றும் மானியங்களை உடனடியாக நிறுத்தப் போவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.
English Summary
Trump not inviting South Africa to the next G20 summit