உசிலம்பட்டி அருகே கார் மோதி சாலையை கடந்த 04 பேர் பலி: 03 பேர் படுகாயம்..!
04 people killed 03 seriously injured after being hit by a car while crossing the road near Usilampatti
உசிலம்பட்டி அருகே நேற்றிரவு சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதியதில் தாய், குழந்தை உட்பட 04 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் 03 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டி மற்றும் பேச்சியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த குழந்தைகள் உட்பட 07 பேர் நேற்று உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோயிலில் வழிபாடு முடித்துவிட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்ப அரசு பஸ்சில் புறப்பட்டனர்.

இவர்கள் இரவு 08 மணியளவில் குஞ்சாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக தேனியில் இருந்து உசிலம்பட்டி நோக்கி அதிவேகமாக வந்த கார், அவர்கள் மீது மோதியதில் இந்த கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் குஞ்சாம்பட்டியை சேர்ந்த ஜெயமணி (42), அவரது மனைவி ஜோதிகா (25), மகன் பிரகலாதன் (3), மகள் கவியாழினி (1), தாய் லட்சுமி (55), கருப்பாயி (60), பேச்சியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த பாண்டிச்செல்வி (42) ஆகியோர் படுகாயமடைந்ததுள்ளனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் 07 பேரையும் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், ஜோதிகா, அவரது மகன் பிரகலாதன், லட்சுமி மற்றும் பாண்டிச்செல்வி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஜெயமணி, கருப்பாயி மற்றும் குழந்தை கவியாழினி ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்ற கார் டிரைவர் ஆனந்தகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.
English Summary
04 people killed 03 seriously injured after being hit by a car while crossing the road near Usilampatti