சச்சின் டெண்டுல்கரின் 37 ஆண்டுகால சாதனை; 15 வயதில் தகர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷி..!
Vaibhav Suryavanshi has shattered Sachin Tendulkars 37 year old record
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி தற்போது முறியடித்துள்ளார்.
இந்திய அணியின் திர்காலத்தைக் கருத்தில் கொண்டு இருபது ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடனான தொடருக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டி20 உலகக்கோப்பையை வென்று தந்த சூர்யகுமார் யாதவிடம் இருந்து கேப்டன் பதவி, தற்போது ஸ்ரேயஸ் ஐயர் வசம் சென்றுள்ளது. அத்துடன், சூர்யகுமார் யாதவுக்கும் இந்த அணியில் இடம் இல்லாமல் உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்ததாக 15 வயது 71 நாட்களேயான வைபவ் சூர்யவன்ஷி இந்திய இருபது ஓவர் கிரிக்கெட்டில் அணியில் இடம் பிடித்துள்ளார். இதன்காரணமாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்து, இந்திய அணியில் இடம்பெற்ற மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றுள்ளார்.
கடந்த 1989-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தனது 16-வது வயதில் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் அறிமுகமாமானார். இந்திய அணியில் இடம்பிடித்த மிக இளம் வீரர் என்ற அவரது சாதனை கடந்த 37 ஆண்டுகளாக யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் 15 வயதே ஆன பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, சச்சினின் சாதனையைத் தகர்த்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த 19 வது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 16 போட்டிகளில் 776 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். அத்துடன், அதிக சிக்ஸர்கள், அதிக ஸ்ட்ரைக் ரேட் என 05 விருதுகளையும் தட்டி தூக்கினார்.
ஐபிஎல் தொடருக்கு முன்பாக வைபவ் சூர்யவன்ஷி ஆட்டத்திறன் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், ஜஸ்பிரித் பும்ரா, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் காகிசோ ரபாடா, புவனேஷ்வர்குமார் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து தனது அசத்திய திறமையை நிரூபித்து காட்டினார்.

ஐபிஎல் தொடரில் அவர் காட்டிய இந்த வாண வேடிக்கை அவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அயர்லாந்து தொடருக்கு முன்னதாக வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா ஏ அணியில் இடம் பிடித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் தேர்வு குறித்து தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர் குறிப்பிட்டுள்ளதாவது; "அவரது அபார ஆட்டத்திறனை எங்களால் புறக்கணிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய அழுத்தங்கள் நிறைந்த போட்டிகளில் ஒரு 15 வயது சிறுவன் காட்டியுள்ள முதிர்ச்சி வியக்க வைக்கிறது. அவர் ஒரு ஆட்டத்தையே மாற்றக்கூடிய வீரர். அவர் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது" என்று வெகுவாக பாராட்டி உள்ளார்.
English Summary
Vaibhav Suryavanshi has shattered Sachin Tendulkars 37 year old record