உத்தராகண்டுக்கு குடிப்பெயர திட்டம்; மாநில முதல்வருக்கு ரிஷப் பந்த் நள்ளிரவில் வைத்த கோரிக்கை..!
Rishabh Pants request to the state Chief Minister who is planning to move to Uttarakhand
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். டெல்லியில் இருந்து குடிபெயர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தில் நிலம் வாங்கி, வீடு கட்டி நிரந்தரமாக குடியேற முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக பந்த், அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் சமூக வலைதளப் பதிவு மூலம் கோரிக்கை வைத்துள்ளார். அந்த பதிவு தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ரிஷப் பந்த், தற்போது சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். டெஸ்ட் தொடரில் பந்தின் அதிரடி ஆட்டம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். 28 வயதான அவர், தற்போது டெல்லி அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவரது பூர்வீகம் ஹரித்வார் என கூறப்பட்டாலும், பல்வேறு தருணங்களில் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

தற்போது டெஸ்ட் தொடருக்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பந்த், நள்ளிரவு 12.46 மணி அளவில் எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் ட்வீட் செய்து, அதில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை டேக் செய்திருந்தார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
''வணக்கம் சார். எப்படி உள்ளீர்கள். நீண்ட நாட்களாக உத்தராகண்ட் மாநிலத்தில் நிலம் வாங்க நான் முயற்சித்து வருகிறேன். என்னுடைய இருப்பிடத்தை டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலத்துக்கு மாற்ற விரும்புகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்கான முயற்சி நடக்கிறது. ஆனால், எதுவும் கைகூடவில்லை. எனக்கு இதில் உங்களது உதவி வேண்டுமென என கேட்டுக் கொள்கிறேன்.
உத்தராகண்ட் மாநிலத்தை நான் நேசிக்கிறேன். எனது பூர்வீக பூமியில் வசிக்க விரும்புகிறேன். நமது மாநிலத்தை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவபடுத்துவது எனக்கு கிடைத்த பரிசு'' என பதிவிட்டுள்ளார்.
அதற்கு உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பதிலளித்து கூறியுள்ள்ளதாவது;
''அன்பிற்கினிய ரிஷப் பந்துக்கு.. நீங்கள் நம் மாநிலத்தின் பெருமை. நீங்கள் உங்களது பூர்வீக பூமிக்கு திரும்ப விரும்புவது பாராட்டத்தக்கது. உங்களது கோரிக்கையை அது தொடர்பான துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். இந்த விவகாரத்தில் விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்'' என ரிஷப் பந்துக்கு பதிலளித்துள்ளார்.
அதாவது, உத்தராகண்ட் மாநிலத்தில் நிலம் வாங்குவதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக அம்மாநிலத்தை சேராதவர்கள் அங்கு நிலம் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளது. அத்துடன் அம்மாநிலத்தில் குடியிருப்பு, வேளாண் நிலம் என ஒவ்வொன்றுக்கும் அங்கு விதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Rishabh Pants request to the state Chief Minister who is planning to move to Uttarakhand