'தமிழகத்தின் குரலை டெல்லிக்கு உரக்கச் சொல்ல வியூகம்'...! - தொடங்கியது முதல்வர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம்...! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடும் என பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும், எல்லைகளும் மாற்றியமைக்கப்பட்டால், மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழகத்துக்கு அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் அரசியல் கட்சிகளிடையே நிலவி வருகிறது.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதங்கள் எழுந்தபோது, தமிழகத்தின் உரிமைகளும் அரசியல் பிரதிநிதித்துவமும் பாதிக்கப்படக்கூடாது என்று பல்வேறு கட்சிகள் ஒருமித்த குரல் எழுப்பியிருந்தன.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா என்ற கேள்வி நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது. ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர்.ஆனால், கூட்டம் தொடங்குவதற்கு முன்பே முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தின.முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.

இதனால், தமிழகத்தின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பங்கேற்காத நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மதியம் சென்னை கலைவாணர் அரங்கில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.த.வெ.க.வுக்கு ஆதரவாக உள்ள கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், மாநிலத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் கருத்துகள் பரிமாறப்பட்டன.காங்கிரஸ் கட்சிக்கு 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், அவர்கள் அனைவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் பங்கேற்றனர்.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள துரை வைகோவும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.இதன் மூலம் த.வெ.க.வுக்கு ஆதரவாக உள்ள கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் மொத்தம் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.இவர்களில் 20 பேர் மட்டுமே முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.மீதமுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.தி.மு.க. சார்பில் 20 மக்களவை உறுப்பினர்களும், 8 மாநிலங்களவை உறுப்பினர்களும் என மொத்தம் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

அதேபோல், அ.தி.மு.க. சார்பில் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.இந்த இரு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சர் விஜய் அழைத்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டம், ஆளும் தரப்பினரின் பங்கேற்புடன் நடைபெற்றாலும், முக்கிய எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பால் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Strategy to make Tamil Nadu voice heard in Delhi All party MPs meeting begins under leadership Chief Minister Vijay


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->