இனி சென்னையின் முக்கிய இடங்களில் ஃப்ரீ வைபை...! மாநகராட்சி ஆணையர் ஆலோசனை...! - Seithipunal
Seithipunal


சென்னையில் கடற்கரைக்கு பொழுதுபோக்காக செல்லும் பொதுமக்கள், பூங்காக்களில் நேரத்தை செலவிடுவோர் மற்றும் விளையாட்டுத் திடல்களை பயன்படுத்துவோருக்கு புதிய வசதி அறிமுகமாக உள்ளது.மக்கள் அதிகளவில் கூடும் முக்கியமான பொது இடங்களில் இலவச இணைய வசதியை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை தொடங்கும் வகையில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் உயர்தர இலவச இணைய வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, திருவொற்றியூர் கடற்கரை ஆகிய முக்கிய பகுதிகளிலும், மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட இடங்களிலும் இந்த வசதி படிப்படியாக ஏற்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் தங்களது அன்றாட இணையத் தேவைகளை எவ்வித தடையுமின்றி நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இலவச இணைய வசதியை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.சென்னை ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் செ.சரவணன், தலைமைப் பொறியாளர் பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும், ஏர்டெல், ஜியோ, ஹாத்வே, ஏசிடி உள்ளிட்ட இணைய சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு தடையற்ற இணைய இணைப்பை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்தனர்.கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரும் மக்கள் அவசரத் தேவைகளுக்காகவும், இணையவழி சேவைகளைப் பயன்படுத்துவதற்காகவும் இலவச இணைய இணைப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

குறிப்பாக, இணையவழி பணப்பரிவர்த்தனை, தகவல் தேடல், அரசு இணையவழி சேவைகளை அணுகுதல், கல்வி மற்றும் பணிகள் தொடர்பான தேவைகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த வசதி உதவியாக இருக்கும்.அதேபோல், விளையாட்டுத் திடல்கள் மற்றும் பூங்காக்களுக்கு வரும் இளைஞர்கள் உள்ளிட்டோருக்கும் இணைய இணைப்பு பயனுள்ளதாக அமையும்.தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளின் வளர்ச்சிக்கு தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களிலேயே இணைய வசதியை கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.பொதுமக்கள் கூடும் இடங்களில் இணைய இணைப்பு தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகள், சேவையின் தரம், இணைப்பு பரப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இணைய சேவை நிறுவனங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் விரிவாக ஆலோசித்தனர்.

இதற்கான அடுத்தகட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.சென்னையின் முக்கிய பொது இடங்களில் இலவச இணைய வசதி நடைமுறைக்கு வந்தால், பொதுமக்களின் அன்றாட இணையப் பயன்பாட்டுக்கு இது கூடுதல் வசதியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free WiFi in key locations in Chennai Corporation Commissioner advice


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->