நியூசிலாந்து தொடரில் விராட் கோலி முறியடிக்கவுள்ள சாதனைகள் – 28,000 ரன்கள் முதல் சச்சின் சாதனை வரை! முழு விவரம்!
Records Virat Kohli will break in the New Zealand series
2026 புத்தாண்டில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில், அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக களமிறங்கவுள்ளனர். கடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்கள் அடித்து, தொடர் நாயகன் விருதையும் வென்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய விராட் கோலி, தற்போது சிறப்பான ஃபார்மில் உள்ளார். இதனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அவர் அபாரமாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்த நிலையில், இந்த தொடரில் விராட் கோலி படைக்க வாய்ப்புள்ள சில முக்கியமான சாதனைகள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன.
முதலாவதாக, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை சேர்த்து சர்வதேச அரங்கில் இதுவரை 27,975 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி, இந்த தொடரில் மேலும் 25 ரன்கள் எடுத்தாலே, சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக 28,000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைப்பார். இதற்கு முன் இந்த சாதனையை இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 644 இன்னிங்ச்களில் நிகழ்த்தினார். ஆனால் விராட் கோலி, தற்போது 623 இன்னிங்ச்களிலேயே இந்த எண்ணிக்கையை எட்ட உள்ளதால், அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.
இரண்டாவதாக, இந்த தொடரில் அவர் 42 ரன்கள் மட்டுமே அடித்தாலே, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் குமார் சங்ககாராவை (28,016 ரன்கள்) பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்தை பிடிப்பார். தற்போது அந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (34,357 ரன்கள்) முதலிடத்திலும், விராட் கோலி (27,975 ரன்கள்*) மூன்றாம் இடத்திலும் உள்ளார். இந்த சாதனையை கோலி எட்டுவது கிட்டத்தட்ட உறுதியான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
மூன்றாவதாக, ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் விராட் கோலிக்கு ஆபத்தில் உள்ளது. இதுவரை சச்சின், நியூசிலாந்துக்கு எதிராக 1,750 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். அதே நேரத்தில், விராட் கோலி தற்போது 1,657 ரன்கள் எடுத்துள்ளார். இந்த தொடரில் மேலும் 94 ரன்கள் எடுத்தாலே, அந்த சாதனையையும் கோலி முறியடிக்க முடியும்.
நான்காவதாக, ஒருநாள் கிரிக்கெட்டில் மிக வேகமாக 15,000 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை அவர் ஒருநாள் போட்டிகளில் 14,557 ரன்கள் குவித்துள்ளார். இந்த சாதனைக்கு இன்னும் 443 ரன்கள் தேவை. மூன்று போட்டிகள் மட்டுமே உள்ளதால், இது சற்று கடினமான இலக்காக இருந்தாலும், கோலியின் தற்போதைய ஃபார்மை கருத்தில் கொண்டால், முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகவும் இல்லை.
மொத்தத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடர், இந்திய அணிக்கு மட்டுமல்லாமல், விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் முக்கியமான மைல்கல்லாக அமையக்கூடும். ரசிகர்கள் அனைவரும் அவரது சாதனை வேட்டையை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
English Summary
Records Virat Kohli will break in the New Zealand series