வான் உயரத்தில் இருந்து வந்த பந்து: புதிய கின்னஸ் சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!
Jos Buttler Shatters Guinness World Record with a Gravity Defying Catch
இங்கிலாந்து அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஸ் பட்லர், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அசாதாரணமான சாதனையைப் படைத்துக் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். மிக உயரத்தில் இருந்து விழும் பந்தைப் பிடித்து (Highest Catch), அவர் முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்ற இந்த முயற்சியில், ஒரு ட்ரோன் (Drone) மூலம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 122 மீட்டர் உயரத்தில் இருந்து கிரிக்கெட் பந்து வீசப்பட்டது. கீழே தயாராக இருந்த பட்லர், அதிவேகமாக வந்த அந்தப் பந்தை மிகவும் லாவகமாகப் பிடித்துப் புதிய மைல்கல்லை எட்டினார். இது டெல்லியில் உள்ள குதுப்மினாரை விடச் சுமார் மூன்று மடங்கு உயரமாகும்.
முந்தைய சாதனையை முறியடித்தார்:
இதற்கு முன்னதாக, 2021-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் திமோதி ஷானன் 119.86 மீட்டர் உயரத்தில் இருந்து வீசப்பட்ட பந்தைப் பிடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள பட்லரின் இந்தச் சாதனை வீடியோவை, முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஐசிசி டி20 உலகக் கோப்பையின் போது பகிர்ந்துள்ளார்.
வான்வெளியில் இருந்து அதிவேகமாக வரும் பந்தைக் கணித்துப் பிடிப்பது விக்கெட் கீப்பர்களுக்கே சவாலான காரியம் எனும் நிலையில், பட்லரின் இந்தத் திறன் ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Jos Buttler Shatters Guinness World Record with a Gravity Defying Catch