ஐபிஎல் 2025: கொல்கத்தா அணியின் துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயர் – மீண்டும் இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்குமா?
IPL 2025 Kolkata team vice captain Venkatesh Iyer Will the Indian team get a chance again
ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இந்த சீசனுக்கான முக்கிய மாற்றங்களில், அஜிங்கிய ரகானே கொல்கத்தாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், அதேசமயம் வெங்கடேஷ் ஐயர் துணை கேப்டனாக பொறுப்பேற்கிறார்.
கடந்த சீசனில், கொல்கத்தா அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த வெங்கடேஷ் ஐயர், பிளேஆஃப் சுற்றுகளில் தொடர்ந்து அரை சதங்கள் அடித்து அசத்தினார். இதனால், 2025 சீசனில் அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் சிறப்பாக விளையாடினால், எதிர்காலத்தில் முழு நேர கேப்டனாக பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே, 2022ல் இந்திய அணிக்காக அறிமுகமான வெங்கடேஷ் ஐயர், ஒரு கட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் மாற்றாக கருதப்பட்டார். ஆனால், 2 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதற்கிடையே, ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து மீண்டு, சிறப்பாக ஆடி, இந்திய அணிக்கு முக்கியமான இரண்டு கோப்பைகளை வெல்ல உதவினார். இதனால், வெங்கடேஷ் ஐயர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது, மீண்டும் இந்திய அணியில் சேர விரும்பும் அவர், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
“ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை நிகழ்த்துவதற்கு தேவையான திறன் என்னிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஒருவேளை அதை செய்ய முடியாமல் போனால், எனது கேரியர் முடியும் போது அதற்காக வருத்தப்படுவேன். தற்சமயத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகளில் என்னால் பங்காற்ற முடியும் என்பதும் எனக்கு தெரியும். என்னால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட முடியும். வாய்ப்பு கிடைத்தால், என்னுடைய அனைத்தையும் நான் கொடுக்க விரும்புகிறேன்.”
வெங்கடேஷ் ஐயர் ரஞ்சிப் கோப்பையில் பெரியளவில் தாக்கம் செலுத்தியதாக தெரியவில்லை. இதற்கிடையே, வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக நித்திஷ் ரெட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இதனால், இந்திய அணியில் மீண்டும் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஐபிஎல் 2025 சீசனில் வெங்கடேஷ் ஐயர் தன்னுடைய திறமையை நிரூபித்து, இந்திய அணியில் இடம்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!
English Summary
IPL 2025 Kolkata team vice captain Venkatesh Iyer Will the Indian team get a chance again